சுமார் ரூ.50 கோடி ரூபாய் மதிப்பிலான சிட்பண்ட் திட்டத்தில் பணத்தை கொட்டிய மூதலீட்டாளர்களை ஏமாற்றிவிட்டு, தப்பிச்சென்றுவிட்டதாக பெங்களூருவில் வசித்து வந்த கேரளா தம்பதியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கேரளாவைச் சேர்ந்த வர்க்கீஸ் மற்றும் ஷைனி டாமி என்ற தம்பதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 2000ம் ஆண்டு முதல் சிட்பண்ட் நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். அதிக வட்டி கொடுப்பதாகக் கூறி 400க்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்றுள்ளனர். வாங்கிய பணத்திற்கு வட்டியோ, அசலோ கொடுக்காமல், ரூ.50 கோடி வரை மோசடி செய்துள்ளனர். இருவரும் பணத்துடன் தலைமறைவான நிலையில், பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்பிறகு சுமார் 400 பேர் புகார் அளித்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த டாமி - ஷைனி என்ற தம்பதி பெங்களூருவின் ராமமூர்த்தி நகரில் A&A சிட்ஸ் அண்ட் பினான்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். இவர்கள் மாதம் அதிக வருமானம் வரும் என்றும் கடந்த 20 ஆண்டுகளாக நம்பிக்கை பெற்ற நிறுவனம் என்று கூறியும் மக்களுக்கு வாக்குறுதி அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது இவர்கள் மீது பணமோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவர்கள் மீது வரப்பெற்ற புகார்களில், கடந்த 25 ஆண்டுகளாக இந்த தம்பதி நிதி நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இவர்கள் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 15% முதல் 20% வரை அதிக வருமானம் கிடைக்கும் என வாக்குறுதி அளித்துள்ளனர். இதனால், பலரும் இவர்களின் வாக்குறுதிகளை நம்பி தங்களின் ஒட்டுமொத்த வாழ்நாள் சேமிப்பையும் இவர்களின் நிறுவனத்திலேயே முதலீடு செய்துள்ளனர். இதில் பலரும் தங்களின் நிலம், வீடு போன்ற சொத்துக்களை விற்று, அதிக வருமானம் வரும் என்பதால் இங்கு முதலீடு செய்துள்ளனர்.
தொடர்ந்து சில ஆண்டுகளாக இந்த நிறுவனம் வருவாயை முதலீட்டாளர்களுக்கு சரியாக கொடுத்துவந்துள்ளனர். இதன்மூலம் அந்நிறுவனம் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையும் அதிகரித்திருக்கிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணம் ஏதும் சரிவர கொடுக்கப்படவில்லை. மேலும், முதலீட்டாளர்களால் டாமி மற்றும் ஷைனியை நீண்ட நாள்களாக தொடர்பு கொள்ளவே இயலவில்லையாம்.
இதனால், A&A சிட்ஸ் அண்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் கணிசமான தொகையை முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் பதற்றமடைய தொடங்கினர். தொடர்ந்து, அந்த தம்பதியை தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காதபோதுதான் அவர்கள் இருவரும் அந்த சொத்துக்களை பணமாக்கிக் கொண்டு பெங்களூருவை விட்டே தப்பி ஓடியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாகவும் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். தப்பித்துச் சென்ற தம்பதியை கண்டுபிடித்து, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு அவர்களின் பணத்தை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. தொடர்ந்து போலீசாரும் அந்த தம்பதியை தீவிரமாக தேடி வருகின்றனர், அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள், அதன் தொடர்புடைய நிதி சார்ந்த பதிவுகள் போன்ற ஆதாரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக மட்டும் இதுவரை 400க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் வாக்குமூலத்தை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் பாதிக்கப்பட்ட பலரும் புகார் அளிக்க முன்வராதவர்களாகவோ அல்லது தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறியாதவர்களாகவோ இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI