நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் மக்கள் கூடும் முக்கிய இடங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் உதவியுடன் காவல்துறையினர் சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளனர்.  மக்கள் கண்ணில் இருந்து தப்பினாலும் மூன்றாவது கண்ணான சிசிடிவி கேமராவின் கண்ணில் இருந்து தவறு செய்பவர்கள் தப்புவது கடினம். இருப்பினும் அதனை மறந்தும், சேதப்படுத்தியும் பலர் தொடர்  கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு பின்னர் காவல்துறையினரால் பிடிபட்டு கம்பி எண்ணி வருகின்றனர்.




இந்த சூழலில் நெல்லை சந்திப்பு அருகே உடையார்பட்டி பகுதியில் தொடர்ச்சியாக அடுத்ததடுத்த 3 கடைகளில் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக அங்குள்ள கோழிக்கறி விற்பனை செய்யும் கடை மற்றும் டயர் விற்பனை செய்யும் கடைகள் என 3 கடைகளில் நேற்று இரவு மர்ம நபர் கடப்பாறை மூலம் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடித்துள்ளார். குறிப்பாக சிறிய கடைகள் என்பதால் அந்த கடைகளில் உள்ள  கல்லாவில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலையில் கடைகளை திறக்க கடைக்காரர்கள் வந்த போது அடுத்தடுத்த கடைகளில் உள்ள கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த  காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தியதோடு அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.






 


அப்போது அங்குள்ள கேமரா ஒன்றில் பதிவான காட்சிகளை கைப்பற்றியதில் அதில் மர்ம நபர் ஒருவர் கையில் கடப்பாறை கம்பியுடன் ஆமை போல் கடை முன்பு சென்று சுற்றி பார்த்துவிட்டு கையில் இருந்த கடப்பாறையால் பூட்டை உடைப்பது தெரிய வந்தது. குறிப்பாக 3 கடைகளில் பூட்டை உடைத்த கொள்ளையன் 4வது கடை முன்பு நின்று கடப்பாறையால் பூட்டை உடைக்க முயற்சி செய்கிறார். அப்போது அருகே இருந்த சிசிடிவி கேமராவை பார்த்தவுடன் பூட்டை உடைக்கும் முயற்சியை விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறார். இந்த காட்சிகளை வைத்து  நெல்லை சந்திப்பு குற்றப்பிரிவு காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை போன மதிப்பு தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண