கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த எஸ்.முதுகானப்பள்ளியை சேர்ந்தவர் ராகேஷ் வயது (28). இவர் விவசாயம் செய்து வருகிறார்.இவர் சொந்தமாக ஜீப் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தனது ஜீப்பை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார்.மறுநாள் காலையில் வெளியே வந்து பார்த்துள்ளார் ஜீப் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஜீபை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராகேஷ் மத்திகிரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் ஜீப் காணவில்லை என பதிவிட்டு உள்ளார்.


 





நேற்று மாலை எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிலர் கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது ஓசூர் தாண்டி தும்கூர் சாலையில் நெலமங்கலா பகுதியில் அவர்கள்  காரில் சென்றபோது சாலையோரத்தில் ராகேசின் ஜீப் நிற்பதை பார்த்துள்ளனர். வாகனத்தின் நம்பர் பிளேட்டை கொள்ளையர்கள் மாற்றி நிறுத்தி வைத்திருந்தை பார்த்த அவர்கள், இதுதொடர்பாக ராகேஷ் ஜீப் என உறுதி செய்தனர். இந்த தகவலை ராகேசுக்கு  அளித்துள்ளனர்.உடனே ராகேஷ், தனது உறவினர்களான நந்தா, கிஷோர், ஹரிநாத் உள்ளிட்ட 3நபர்களை அழைத்துக்கொண்டு நெலமங்கலா பகுதிக்கு சென்றார். அந்த நேரம் கொள்ளையர்கள் காரை தும்கூர் சாலையில் ஓட்டிச் சென்றனர்.


அவர்களை ராகேஷ் மற்றும் அவருடன் வந்தவர்கள் துரத்தி பிடிக்க முயன்றனர். இதற்காக அவர்கள் ஜீப்பை பின் தொடர்ந்து சென்றனர். பின்தொடர்வதை பார்த்த ஜீப்பில் இருந்த கொள்ளையர்கள், தாங்கள் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் ராகேஷ் தரப்பை நோக்கி சுட்டனர். துப்பாக்கியில் இருந்து  குண்டு வெளியேறியது. அந்த குண்டு ராகேஷ் சென்ற வாகனம் மீது படவில்லை. மேலும் ராகேஷ் மற்றும் அவருடன் வந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த செல்போன் மூலம் கொள்ளையர்களின் நடவடிக்கைகளை புகைப்படங்கள் எடுத்துள்ளனர். கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதால் ராகேஷ் தரப்பினர் அவர்களை பின் தொடர்ந்து செல்லும் முடிவை கைவிட்டனர். 


 





அதனைத்தொடர்ந்து கொள்ளையர்கள் நெலமங்கலா சுங்கச்சாவடியை இடித்து விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ராகேஷ் பெங்களூரு நெலமங்கலா காவல்துறையிடம் புகார் செய்தார்.
காவல்துறையினர் விசாரணை ஜீப்பை திருடிய நபர்கள் இந்தியில் பேசியவாறு ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் வட மாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.இந்த தகவல்களை வைத்து ஓசூர் போலீசாரும் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.  ஓசூர் அருகே ஜீப்பை திருடிய வட மாநில கொள்ளையர்கள், விரட்டி சென்றவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.