மயிலாடுதுறை சாரதா நகரில் பூட்டியிருந்த ஒரு வீட்டின் கதவை உடைத்து லாக்கருடன் 21 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், சண்முகம் (எ) மணிகண்டன் மற்றும் சதாசிவம் ஆகிய இரண்டு கொள்ளையர்களை மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட 21 சவரன் நகைகள் மற்றும் திருடப்பட்ட இருசக்கர வாகனமும் மீட்கப்பட்டுள்ளது.
பேராசிரியர்கள் வீட்டில் கைவரிசை
மயிலாடுதுறை சாரதா நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் தனியார் கல்லூரி பேராசிரியர்களான மணிகண்டன் விஜயா தம்பதியினர். மணிகண்டன் தஞ்சாவூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகவும், அவரது மனைவி விஜயா தனது குழந்தைகளுடன் திருச்சியில் தங்கி அங்குள்ள கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த நவம்பர் 21, 2025 அன்று காலை, பேராசிரியர் தனது வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல் கல்லூரி பணிக்குச் சென்றவர், அடுத்த அடுத்த நாட்கள் சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை என்பதால் தனது குடும்பத்தினரைப் பார்ப்பதற்காகத் திருச்சி சென்றுள்ளார்.
இந்த சூழலில், நவம்பர் 22, 2025 அதிகாலையில், பூட்டப்பட்டிருந்த அவரது வீட்டின் முன் கதவை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து, வீட்டின் உள்ளே சென்று அறையில் வைக்கப்பட்டிருந்த 21 சவரன் தங்க நகைகள் அடங்கிய லாக்கரை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும், வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு இருசக்கர மோட்டார் சைக்கிளையும் திருடிச் சென்றுள்ளனர்.
தனிப்படை அமைத்து தீவிர விசாரணை
இச்சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், உத்தரவின் பேரில், மயிலாடுதுறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் நரசிம்மபாரதி ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடி வந்தனர்.
குற்றவாளிகள் கைது
இந்தக் குற்றச் சம்பவத்தில் இதேபோன்று முறையில் கொள்ளையடிக்கும் தொழில்முறைகள் மற்றும் சிறைச்சாலையிலிருந்து வெளிவந்த குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இரகசிய விசாரணையின் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது மயிலாடுதுறை, நல்லத்துக்குடி, சிவன் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் 42 வயதான சண்முகம் (எ) மணிகண்டன் மற்றும் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம், பெரியார் நகரை சேர்ந்த முனுசாமி என்பவரது மகன் 49 வயதான சதாசிவம் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து வழக்கின் இரண்டாவது குற்றவாளியான சதாசிவம் நவம்பர் 24, 2025 அன்று மயிலாடுதுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த முதல் குற்றவாளி சண்முகம் (எ) மணிகண்டன் நவம்பர் 26, 2025 அன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மேலும், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கொள்ளையர்கள் லாக்கரைப் பெயர்த்து எடுத்துச் சென்று, அருகில் இருந்த ஓர் இடத்தில் உடைத்து நகைகளை எடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து மணிகண்டனிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 21 சவரன் தங்க நகைகள் மற்றும் உடைக்கப்பட்ட லாக்கர், திருடப்பட்ட இருசக்கர வாகனமும் மீட்ட காவல்துறையினர், குற்றவாளி மணிகண்டனையும் நீதிமன்றக் காவலில் அடைந்துள்ளனர்.
காவல்துறைக்கு பாராட்டு
சம்பவம் நடந்த சில நாட்களிலேயே விரைந்து செயல்பட்டு, எதிரிகளைக் கைது செய்து, திருடப்பட்ட நகைகளை மீட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் நரசிம்மபாரதி தலைமையிலான தனிப்படையினரை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், வெகுவாகப் பாராட்டினார்.
மாவட்ட காவல் துறையின் அறிவுரை
வீட்டினை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் பொதுமக்கள், அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து செல்லுமாறு மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பூட்டி வைத்திருக்கும் வீடுகளில் தங்க நகைகள் மற்றும் பணத்தினை வைக்க வேண்டாம் எனவும், அவற்றை பாதுகாப்பாக வங்கி லாக்கர்களில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.