Marriage Dispute: மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் சென்னையை விட்டு வெளியேறி தலைமறைவாக இருப்பதாக, தொழிலதிபர் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொழிலதிபர் வேதனை:
பிரசன்னா சங்கர் என்பவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”என் பெயர் பிரசன்னா, 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ரிப்ளிங்க் நிறுவனத்தின் நிறுவனர். நான் விவாகரத்து பெறப் போகிறேன். சென்னை போலீசாரிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வெளியே மறைந்திருக்கும் நான் இப்போது தப்பி ஓடிக்கொண்டிருக்கிறேன். இது எனது கதை என தனது முதல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
திருமண வாழ்க்கை
தொடர்ச்சியாக அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், “ சென்னையில் பிறந்து 20 வருடங்கள் இங்கு வசித்து வந்தேன். திருச்சி NIT-யில் படித்தேன், அங்குதான் என் மனைவியைச் சந்தித்தேன். இந்தியாவில் நான் #1 கோடராக தரவரிசைப்படுத்தப்பட்டேன். தொழில்நுட்ப நிறுவனங்களைத் தொடங்க அமெரிக்கா சென்றேன். நானும் என் மனைவி திவ்யாவும் திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது, எங்களுக்கு 9 வயதில் ஒரு மகன் இருக்கிறான். சமீபத்தில் அவளுக்கு அனூப் என்ற நபருடன் 6 மாதங்களுக்கும் மேலாக காதல் உறவு இருப்பது தெரிந்ததும் எங்கள் திருமணம் முறிந்தது.
போலீஸ் வரை சென்ற பொய் புகார்
அனூப்பின் மனைவி, என் மனைவி அனூப்பிற்கு அனுப்பிய செய்தியையும், அவருக்காக ஹோட்டல் முன்பதிவு செய்ததற்கான தகவல்களையும் எனக்கு அனுப்பினார். அதன் பிறகு, எங்கள் விவாகரத்தின் ஒரு பகுதியாக, நான் அவளுக்கு எத்தனை மில்லியன் டாலர்கள் செலுத்த வேண்டும் என்பதற்கான விதிமுறைகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தோம். அவள் மகிழ்ச்சியடையவில்லை, அதற்கு பதிலாக நான் அவளை அடித்ததாக என் மீது போலி போலீஸ் புகார் அளிக்க முடிவு செய்தாள். பின்னர், நான் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாகபோலி புகார்களை அளித்தார். சிங்கப்பூர் போலீசார் இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்து, அவை ஆதாரமற்றவை என்று கண்டறிந்து, அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் என்னை விடுவித்துள்ளனர்.
விவாகரத்து வழக்கு
நான் இந்தியாவில் விவாகரத்து கேட்டு மனு செய்தேன். விவாகரத்தின் மூலம் அதிக பணம் சம்பாதிக்க அவள் அமெரிக்காவில் விவாகரத்து கேட்டு மனு செய்தாள்.
பின்னர் அவள் விவாகரத்து வழக்கில் உதவுவதற்காக என் குழந்தையை அமெரிக்காவிற்கு கடத்தத் தொடங்கினாள். நான் அமெரிக்காவில் ஒரு சர்வதேச குழந்தை கடத்தல் வழக்கைத் தாக்கல் செய்தேன். நீதிபதி எனக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து குழந்தையைத் திருப்பித் தரச் சொன்னார்.
அவள் சிங்கப்பூரில் சட்டங்களை மீறியதால், எங்கள் சொந்த ஊரான சென்னைக்கு வந்து இங்கேயே குடியேற அவள் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினாள். நாங்கள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம் - நான் அவளுக்கு மாதம் தோராயமாக 9 கோடி 4.3 லட்சம் செலுத்துவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
”கூடுதல் பணம் கேட்ட் பிரச்னை”
நான் அவளையும் என் மகனையும் சென்னைக்குத் திருப்பி அனுப்ப விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தேன். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, எங்கள் மகனை சரிபாதி காலம் பராமரிக்க ஒப்புக்கொண்டோம். அது சிறிது காலம் நடந்தது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, குழந்தையின் பாஸ்போர்ட்டை ஒரு பொதுவான லாக்கரில் வைக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் அவள் தப்பித்து சென்றுவிடுவாள் என்று நான் பயந்தேன். அவள் அதைப் பின்பற்ற மறுத்துவிட்டாள். புரிந்துணர்வு ஒப்பந்தம் செல்லாது என்றும், இன்னும் அதிகம் பணம் தர வேண்டும், விவாகரத்து கோரி மீண்டும் அமெரிக்கா செல்வதாகவும் அவள் கூறத் தொடங்கினாள்.
கவலையடைந்த நான் நீதிமன்றத்திற்குச் சென்று, பாஸ்போர்ட்டை லாக்கரில் வைத்த பிறகுதான் என் குழந்தையைத் திருப்பித் தருவேன் என்று கூறினேன். அவள் நீதிமன்றங்களுக்குச் செல்லவில்லை. அதற்கு பதிலாக இரவு 10 மணிக்கு என் ஹோட்டலுக்கு வந்து, என் மகனை 10 நிமிடங்கள் லாபிக்கு அழைத்து மூளை சலவை செய்ய முயன்றதை அதை நான் நிறுத்தினேன்.
”ஓட்டலில் இருந்து தப்பினேன்”
பின்னர் அவள் போலீஸை அழைத்து எனக்கு எதிராக ஒரு கடத்தல் புகார் அளித்தாள். நள்ளிரவில் போலீசார் கதவைத் தட்டினர். ஆனால் நான் அதற்கு முன்பாகவே அங்கிருந்து தப்பினே.
நான் உடனடியாக என் தரப்பு நியாயத்தை என் வழக்கறிஞர்களுடன் போலீசாருக்கு அனுப்பி, குழந்தை தானாக முன்வந்து ஒப்படைக்கப்பட்டதை விளக்கினேன். குழந்தை என்னுடன் மகிழ்ச்சியாக இருக்கிறது, வீடியோ அழைப்பில் அதைக் காட்டுகிறேன். மேலும், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே போலீசார் தலையிடக்கூடாது என தெரிவித்தேன்.
ஆனால் தொடர்ந்து போலீசார் என்னைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றனர். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் என் அம்மாவின் வீட்டைத் தாக்கி என்னை பற்றி விசாரித்தார்கள். குழந்தையை அழைத்துச் செல்ல உதவிய என் நண்பர் கோகுலை அவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் அவன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்படுவான் என்று கூறினர்.
”நண்பனை கைது செய்த போலீசார்”
பயந்துபோன கோகுல், இது கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சனை என்றும், அவரைத் தனியாக விட்டுவிட வேண்டும் என்றும் போலீசாரிடம் கூறிவிட்டு பெங்களூரு சென்றுவிட்டான். ஆனால் வாரண்ட் அல்லது ஆவணங்கள் அல்லது உள்ளூர் பெங்களூரு போலீசாருக்கு எந்த தகவலும் இல்லாமல், மஃப்டி உடையில் பெங்களூரு சென்று அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
கடந்த 3 நாட்களாக அவர் எந்த FIR-ம் இல்லாமல் காவலில் இருக்கிறார். நான் சரணடையவில்லை என்றால் அவர் துன்புறுத்தப்படுவார் என்று எச்சரித்துள்ளனர். அவர்கள் அவரை ஒரு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தவில்லை. அதற்கு பதிலாக தினமும் காலையில் அவரை ஸ்டேஷனுக்கு வரவழைத்து இரவு வரை உட்கார வைத்து வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.
”நீதிமன்றம் செல்வேன்”
என் மீது பல குற்றங்கள் சுமத்த காவல்துறையும் என் மனைவியும் விரைவில் ஒரு கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உள்ளனர். எனது சமூக ஊடக ட்வீட்கள் தவறானவை என்று கூறி எனது நண்பர் கோகுலையும் கையெழுத்திடச் சொல்லியுள்ளனர்.
திங்கட்கிழமை, நான் எனக்காக நீதிமன்றத்தில் "துன்புறுத்தல்" தொடர்பாக மனு தாக்கல் செய்து, நீதிமன்ற அமைப்பு மூலம் விஷயங்களை எடுத்துக்கொள்வேன். இதற்கிடையில், எனது முழு குடும்பமும், தமிழக போலீசாரிடமிருந்து ஒளிந்து கொண்டு, மாநிலத்திற்கு வெளியே உள்ளது.
என்னுடைய செல்போன் இருப்பிடம், கார், UPI, IP எல்லாம் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்” என தொழிலதிபர் பிரசன்னா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு தனது குழந்தை மகிழ்ச்சியாக இருப்பதற்கான வீடியோக்கள், தனது மனைவிக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல் என பல ஆதாரங்களையும் அவர் இணைத்துள்ளார்.
இதன் உண்மைத்தன்மை குறித்து முழுமையாக தெரியாத நிலையில், சமூக வலைதளங்களில் பலரும் பிரசன்னாவிற்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.