குஜராத்தில் காணாமல் போன இளம் தம்பதியினர் வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக இருவரும் சொந்த குடும்பத்தால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த சோனு ரபாரி என 19 வயது பெண்ணும், நவீன் ஜிவாபாய் ரபாரி என்ற 21 வயது இளைஞரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இப்படியான நிலையில் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி தம்பதியினர் இருவரும் காணாமல் போயினர். உடனடியாக குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் சோனு மற்றும் நவீனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து நகாத்ரானா காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பல தரப்பினரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் போலீசாரின் சந்தேக பார்வை இளம்பெண் சோனு குடும்பத்தார் மீது திரும்பியது. புகாரிலும், போலீசார் நடத்திய விசாரணையிலும் அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். 

Continues below advertisement

இதனைத் தொடர்ந்து சிறப்பு குழு அமைக்கப்பட்டு சோனு குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் இருவரையும் குடும்பத்தோடு சேர்ந்து கொலை செய்து விட்டதாக அப்பெண்ணின் தந்தை சர்வ சாதாரணமாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இந்த கொலைக்கான காரணம் தெரிய வந்துள்ளது. அதாவது நவீனும் சோனுவும் காதலித்து திருமணம் செய்தது பெண்ணின் குடும்பத்தினருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஏற்கனவே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் மீறி இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால் நவீனுடனான பந்தத்தை கைவிட வேண்டும் என தொடர்ச்சியாக சோனு தந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால் சோனும், நவீனும் தங்கள் காதல் வாழ்க்கையில் உறுதியாக இருந்துள்ளனர். 

இப்படியான நிலையில் இருவரின் முடிவால் கடும் கோபத்தில் இருந்த சோனுவின் குடும்பம் அவர்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். அதன்படி சம்பவ நாளில் சோனுவின் தந்தையும், அவரது மருமகனும் சோனு மற்றும் நவீனை அழைத்துக் கொண்டு கம்பாலா கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு பைக்கில் அழைத்துச் சென்றனர். அங்கு சோனுவின் தாய் மற்றும் சகோதரர் இருவரும் வந்தனர். அவர்கள் 4 பேரும் சேர்ந்து இருவரையும் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். 

இதனையடுத்து இருவரின் உடல்களையும் அருகிலுள்ள கிணற்றில் வீசி இந்த கொலையை சோனு குடும்பத்தினர் மூடி மறைத்துள்ளனர். இந்த தகவல்கள் அடிப்படையில் சோனுவின் தந்தை, தாய், மருமகன் மற்றும் சகோதரர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தீயணைப்புப் படை மற்றும் தடயவியல் துறையினருடன்  இணைந்து கிணற்றில் இருந்து சோனு மற்றும் நவீன் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.