டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, மூதாட்டியிடமிருந்து நகையை திருடிச் சென்ற பெண்ணை, போலீசார்  ஒரு மணி நேரத்தில் கைது செய்த சம்பவம் ராமநாதபுரத்தில் அரங்கேறியுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தன்னை வீட்டில் தங்க வைத்த மூதாட்டியிடம் தங்க நகைகளை திருடிச் சென்ற பெண்ணை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

 

தொண்டி அஹ்ரகாரம் தெருவைச் சோ்ந்த கோபால் மனைவி வசந்தம் (68). இவர் பூ வியாபாரம் செய்து வருகிறாா். இவரது கடைக்கு அடிக்கடி வாடிக்கையாளராக வந்த உப்பூா் அருகே உள்ள நாகேனந்தலைச் சோ்ந்த சிவகாமி (48) அவருடன் நட்பாக உரிமையெடுத்து பழகினாா். இதனால் இவா் அடிக்கடி வசந்தத்தின் வீட்டுக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார்.



 

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு மூதாட்டி வசந்தத்தை வந்து சந்தித்த சிவகாமி, வந்த இடத்தில் வேலை காரணமாக காலதாமதத்தால் இரவு நேரமாகிவிட்டது, இனிமேல் இந்த நேரத்தில் ஊருக்கு செல்ல இயலாத காரியம். எனவே, உங்கள் வீட்டில் இன்று இரவு தங்கிக் கொள்கிறேன் என்று கேட்டுள்ளார். இதற்கு, மூதாட்டி வசந்தமும் 'அதனாலென்ன என் வீட்டில் இன்று இரவு முழுவதும் தங்கி தூங்கிவிட்டு, மறுநாள் காலை எழுந்து உன் வீட்டுக்கு செல்' என நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து மிகுந்த நம்பிக்கையின் அடிப்படையில் வீட்டில் தங்க அனுமதித்துள்ளார்.

 

அப்போது, இரவில் வீட்டில் இருந்த நேரத்தில் 'நாம் இருவரும் தேநீர் அருந்தலாம், என கூறிய சிவகாமி மூதாட்டி வசந்தத்தின் வீட்டில் இருவருக்கும் தேநீர் தயாரித்து மூதாட்டிக்கும் கொடுத்து, இருவரும் தேனீர் குடித்துள்ளனர். இந்த நிலையில் மறுநாள் காலையில் தூங்கி எழுந்து பார்த்தபோது மூதாட்டி வசந்தத்திற்கு பயங்கர 'ஷாக்'.. அவர் அணிந்திருந்த நகைகள் ஒன்று கூட அவரது கழுத்தில் இல்லை. அதே போல் வீட்டில் தங்கி இருந்த சிவகாமியையும் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டார். மொத்தம் 11.5 பவுன் தாலி சங்கிலி, 6 பவுன் தங்க வளையல், 5 கிராம் தங்க மோதிரம், செல்போன், ரூ.1,420 ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.



 

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தொண்டி காவல் ஆய்வாளா் இளவேனில் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து சிவகாமியை தேடினா். இதையடுத்து ஒரு மணி நேரத்தில் நாகனேந்தல் கிராமத்தில் அவரை போலீஸாா் கைது செய்தனா். அப்போது சிவகாமியிடமிருந்த தங்க நகைகள் மற்றும் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். முதல் கட்ட விசாரணையில், அவர்கள் குடித்த தேநீரில், மூதாட்டி வசந்தத்துக்கு மயக்க மருந்தை கலந்து கொடுத்து நகைகளை சிவகாமி திருடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் மேலும் விசாரிக்கின்றனா்.

 

நட்புடன் பழகிய உரிமையில், நம்பிக்கை வைத்து வீட்டில் தங்க வைத்த மூதாட்டியை தேநீரில் மயக்க மருந்து கொடுத்து நட்பாய் பழகிய பெண் ஒருவர் நகையை திருடி சென்ற சம்பவம் ராமநாதபுரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.