காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் மர்ம சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


காஞ்சிபுரம் (Kanchipuram) : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடம் (rajiv gandhi memorial sriperumbudur ) அமைந்துள்ளது. 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது , தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.


அப்பொழுது மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அந்த இடத்தில் தற்பொழுது ராஜீவ் காந்தி நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த பகுதியாக இருப்பதால், எப்பொழுதும் அந்த இடத்தில் பாதுகாப்பிற்கு காவல் துறையினர் இருப்பார்கள். அதேபோன்று இந்தியாவை சேர்ந்த பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இப்பகுதிக்கு வந்து அஞ்சலி செலுத்துவதும் வழக்கம் .




இந்த நிலையில் இன்று மதியம் ராஜீவ் காந்தி நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் மர்ம சூட்கேஸ் ஒன்று இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் பேரிகார்ட் வைத்து அப்பகுதியை தனிமைப்படுத்தினர். இதனை அடுத்து வெடிகுண்டு பரிசோதனை செய்யும் காவலர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து மெட்டல் டிடெக்டர் வைத்து அந்த சூட்கேஸை ஆய்வு செய்தனர். மேலும் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அந்தப் பையை யாராவது வீசி சென்று இருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று அப்பகுதியில் தொடர் கண்காணிப்பிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ராஜீவ் காந்தி நினைவிடம் வாசலில் மர்ம சூட்கேஸ் இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுகுறித்து காவல்துறையிடம் விசாரித்த பொழுது, தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து முதற்கட்டமாக செய்ய வேண்டிய பாதுகாப்பு பணிகள் செய்து முடித்திருப்பதாகவும் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். சூட்கேசில் என்ன இருப்பது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண