ராஜஸ்தானில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை மரத்தில் கட்டிவைத்து கணவன் தாக்கும் சம்பவம் அடங்கிய வீடியோ வைரலான நிலையில் தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.


ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் கட்டோல் எனும் பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் அடங்கிய வீடியோ நேற்று மாலை இணையத்தில் வைரலானது. இதனையடுத்து மாவட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.


அப்போது சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் அடையாளமும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளமும் தெரியவந்தது. பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் பெறப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அந்தப் பெண் அவரது தந்தை வீட்டில் இருந்தார். பெண் அளித்த புகாரின் பேரில் அவரது கணவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.


சந்தேகப்பட்ட கணவர்:


மாவட்ட காவல் துணை கண்காணிப்பார் கைலாஷ் சந்திரா இச்சம்பவம் குறித்து கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் கடந்த 24ஆம் தேதியன்று சொந்த வேலையில்ன் நிமித்தமாக கட்டோல் கிராமத்துக்கு சென்றுள்ளார். அங்கே அவரது பழைய நண்பர் தேவிலால் மேதாவை சந்தித்துள்ளார். அவரிடம் தன்னை தனது மாமியார் வீட்டில் இறக்கிவிடும்படி சொல்லியுள்ளார். ஆனால் அங்கு அவர்கள் சென்றபோது அவரையும், தேவிலாலையும் சூழ்ந்த பெண்ணின் கணவர் வீட்டார் இருவரையும் சுற்றிவளைத்து சிறைபிடித்துக் கொண்டனர். கணவர் மகாவீர் கட்டாராவுக்கு தகவல் பறக்க அவரும் விரைந்துள்ளார்.


அங்கிருந்து மனைவியையும் தேவிலாலையும் இழுத்துச் சென்று ஒரு மரத்தில் கட்டி வைத்துள்ளார் மகாவீர். பின்னர் அவரும் அவரது மூத்த சகோதரர் கமலேஷும் சேர்ந்து பெண்ணை அடித்துள்ளனர். தேவிலாலையும் அடித்தனர். கணவர் வீட்டார் அனைவருமே இத்தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர் தேவிலாலிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அவரை விடுவித்தனர். ஆனால், 7 மணி நேரத்துக்கும் மேலாக பெண்ணை மட்டும் இடைவிடாமல் துன்புறுத்தினர். பின்னர் அப்பெண்ணை விடுவித்தனர். அவர் அவரது தந்தை வீட்டுக்கு திரும்பிவிட்டார். சம்பவம் நடந்தபோது சுற்றி நின்றவர்கள் அனைவரும் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக போலீஸார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.






தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு:
இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ராகேஷ் சர்மா, ராஜஸ்தான் மாநில டிஜிபிக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.