Crime: லஞ்சம்லா வேணாம், மனைவிக்கு வேலை போதும்.. ரூ.37 லட்சம் சம்பளம் - ஃப்ராட் கணவனின் தில்லாலங்கடி
Rajasthan Crime: கணவனின் புத்திசாலிதனத்தால் மனைவி வேலைக்கே செல்லாமல், ரூ.37.54 லட்சத்தை ஊதியமாக பெற்ற சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.

Rajasthan Crime: ராஜஸ்தான் அதிகாரியின் உதவியை பெறுவதற்காக அவரது மனைவிக்கு, இரண்டு நிறுவனங்கள் வேலையே செய்யாமல் ஊதியம் அளித்தது அம்பலமாகியுள்ளது.
வேலையே இல்லை.. ரூ.37.5 லட்சம் ஊதியம்:
ராஜஸ்தானைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவரது மனைவியை பெயரளவில் மட்டும் ஊழியராக சேர்த்து, இரண்டு நிறுவனங்கள் ரூ.37.5 லட்சத்தை ஊதியமாக வழங்கியுள்ளன. ஆனால், கடந்த இரண்டு வருடங்களில் ஒருநாள் கூட அந்த பெண் இரண்டில் ஒரு நிறுவனத்திற்கு கூட நேரில் சென்றதே இல்லை எனவும் கூறப்படுகிறது. டெண்டர்களை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணையில் தான் இந்த ஒட்டுமொத்த சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
போலி ஊழியருக்கு வாரி வழங்கப்பட்ட ஊதியம்
ராஜஸ்தான் மாநில அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள ராஜ்காம்ப் இன்ஃபோ சர்வீசஸில், தகவல் தொழில்நுட்பத் துறையின் இணை இயக்குநரான பிரத்யுமன் தீட்சித் தான் இந்த பெரும் லஞ்சப்புகாரின் மூளையாக செயல்பட்டுள்ளார். அரசாங்கத்தின் ஒப்பந்தங்களைப் பெற்ற இரண்டு தனியார் நிறுவனங்களான ஓரியன்ப்ரோ சொல்யூஷன்ஸ் மற்றும் ட்ரீஜென் மென்பொருள் லிமிடெட் ஆகியவை, பிரத்யுமனின் மனைவி பூனமை போலியாக ஊழியராக அமர்த்தி கடந்த இரண்டு வருடங்களாக ஊதியம் அளித்து வந்துள்ளனர்.
பிரத்யுமன் தனது மனைவியின் கணக்குகளில் மாதத்திற்கு சுமார் 1.60 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்ய ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. பணம் உண்மையானது என்று காட்டுவதற்காக அவர் தனது மனைவியின் போலி வருகை அறிக்கைகளை தனிப்பட்ட முறையில் அங்கீகரித்ததும் தெரிய வந்துள்ளது.
காரணம் என்ன?
ஒப்பந்தங்களை தங்களுக்கு ஒதுக்குவதற்கான லஞ்சத்தை, தனது மனைவிக்கான மாதாந்திர ஊதியமாக அளித்து விடும்படி அந்த இரண்டு நிறுவனங்களையும் பிரத்யுமன் கட்டாயப்படுத்தியுள்ளார். இந்த வழியில், அந்த இரண்டு நிறுவனங்களும் பிரத்யூமனுக்கு லஞ்சம் கொடுத்து வந்துள்ளனர். ஜனவரி 2019 முதல் செப்டம்பர் 2020 வரை பூனமின் ஐந்து தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு ஓரியன்ப்ரோ சொல்யூஷன்ஸ் மற்றும் ட்ரீஜென் மென்பொருள் லிமிடெட் ஆகியவை பணத்தை மாற்றியிருப்பது தெரியவந்தது. சம்பளம் என்ற பெயரில் மொத்த பணம் ரூ.37,54,405 பூனம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் காலகட்டம் முழுவதும் பூனம் இரண்டு அலுவலகங்களுக்கும் சென்றதே இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃப்ரீலான்ஸ் பெயரில் மோசடி
உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, பூனம் தீட்சித் இரண்டு நிறுவனங்களிடமிருந்து ஒரே நேரத்தில் சம்பளம் பெற்று வந்தது தெரியவந்தது. ஓரியன்ப்ரோ சொல்யூஷன்ஸில் போலியாகப் பணிபுரிந்த நேரத்திலேயே, ஃப்ரீலான்சிங் என்ற பெயரில் ட்ரீஜென் மென்பொருள் லிமிடெட்டில் பணியாற்றியதாக ஊதியம் பெற்றுள்ளார். இதன் மூலம் பிரத்யுமன் தனது லஞ்சப் பணத்தை முறையானதாக மாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். பூனம் சம்பளம் பெற்ற அந்த இரண்டு ஆண்டுகளிலும், மேற்குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களும் பல அரசு ஒப்பந்தங்களை கைப்பற்றியுள்ளன.





















