Medical Crime: படிச்சுதான் வேலைக்கு வந்தீங்களா? கர்ப்பிணி பெண் மரணம், அரசு மருத்துவமனையின் அலட்சியம்?
Rajasthan Blood: தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.

Rajasthan Blood: தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கர்ப்பிணி பெண் மரணம்:
ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க் மாவட்டத்தில் நிவாய் நகரத்தைச் சேர்ந்த 23 வயதான கர்ப்பிணி பெண், ஜெய்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு தவறான க்ரூப் ரத்தம் ஏற்றப்பட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற தவறுதலாக ரத்தம் செலுத்தப்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது, கடந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இது மூன்றாவது சம்பவம் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரத்த வகையில் குழப்பம்
கடந்த 12ம் தேதி ஷைனா எனப்படும் அந்த பெண் குறிப்பிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடுமையான காசநோய், ரத்தத்தில் ஹீமோகுளோபின் கடும் சரிவு மற்றும் இதர கர்ப்பகால பிரச்னைகளை அவர் எதிர்கொண்டுள்ளார். தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு ரத்தம் ஏற்ற வேண்டும் என மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கிக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அதில் பெண்ணின் ரத்த வகை A+ என குறிப்பிடப்பட்டு இருக்க, அதன்படி மறுநாள் அவருக்கு மற்றபடி ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. அதேநேரம், ரத்த வங்கிக்கு அனுப்பட்ட பெண்ணின் ரத்த மாதிரியை பரிசோதித்ததில், அவரது ரத்த வகை B+ என தெரிய வந்தபிறகு தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
உடல்நல பாதிப்பு:
தவறான ரத்த வகை செலுத்தப்பட்டதால் அந்த பெண்ணுக்கு ரத்தக்கசிவு, காய்ச்சல் மற்றும் குளிர் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. தொடர்ந்து பெண்ணின் கரு உயிரிழக்க, ஷைனாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதேநேரம், ரத்தம் செலுத்தப்பட்டதில் ஏற்பட்ட பிழை தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என, அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
மருத்துவமனை சொல்வது என்ன?
இதனிடையே, ரத்தம் எதுவும் மாற்றி செலுத்தப்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள ஷைனாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஸ்வாதி ஸ்ரீவஸ்தவா, “சம்பவம் நடந்த போது நான் விடுப்பில் இருந்தேன். நான் விசாரித்தபோது, மருத்துவர்கள் ரத்தமாற்றம் செய்யத் தொடங்கியபோது, ஒரு எதிர்வினை ஏற்பட்டதாக என்னிடம் கூறினர். நோயாளி ஏற்கனவே மிலியரி காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கருப்பையில் கரு இறந்த பிறகு அவருக்கு அதிக சிக்கல்கள் இருந்தன. அதன் விளைவாகவே உயிரிழந்தார்” என விளக்கமளித்தார்.
3 மரணங்கள்:
ஷைனாவின் மரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் ஏதேனும் விசாரணை தொடங்கியுள்ளதா என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. அதேநேரம், ராஜஸ்தான் அரசாங்க மருத்துவமனைகளில் இதுபோன்ற பிழைகள் மீண்டும் மீண்டும் ஏற்படுவது, நோயாளியின் பாதுகாப்பு கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இதே மருத்துவமனையில் தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால், 23 வயது இளைஞர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. முன்னதாக, ஜேகே லோன் மருத்துவமனையில், தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகளால் 10 வயது சிறுவன் உயிரிழந்தார் என்றும் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.





















