மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ளது புனே. இங்கு அமைந்துள்ளது தௌந்த் தாலுகா. இந்த தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் பாய்கிறது பீமா ஆறு. இந்த ஆற்றில் கடந்த 18-ந் தேதி சடலம் ஒன்றை போலீசார் கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் 3 சடலங்களை போலீசார் கண்டுபிடித்தனர். நேற்று மூன்று குழந்தைகளின் சடலங்களையும் ஆற்றில் இருந்து கண்டுபிடித்தனர். உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் அருகே இருந்து போலீசார் செல்போன் ஒன்றை கண்டெடுத்துள்ளனர். அந்த செல்போன் மூலமாகவே போலீசார் உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடித்தனர்.
ஆற்றில் மிதந்த 7 சடலங்கள்:
போலீசாரில் கைப்பற்றப்பட்ட 7 சடலங்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடையது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. முதலில் உயிரிழந்த 7 பேரும் தற்கொலை செய்து கொண்டதாகவே தகவல்கள் வெளியானது. ஆனாலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த விவகாரம் அந்த மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உயிரிழந்தவர்கள் மோகன் உத்தம் பவார் ( 45), அவரது மனைவி சங்கீதா (40), அவர்களது மருமகன் ஷாம்ராவ் பண்டிட் (28), மகள் ராணி (24) மற்றும் மோகனின் பேரக்குழந்தைகளான ரித்தேஷ் (7) சோட்டு (5), மற்றும் கிருஷ்ணா (3) என்று தெரியவந்தது.
கொலை செய்தது அம்பலம்:
போலீசார் விசாரணையில் இவர்களின் மரணத்தில் மர்மம் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகியது. போலீசார் தங்களது விசாரணையை துரிதப்படுத்தியபோது அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
கடந்தாண்டு அசோக்பவார் என்பவரது மகன் தனஞ்செய் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். வாகோலியில் நடைபெற்ற இந்த விபத்திற்கு மோகன் மற்றும் அவரது மகன் அனில்தான் காரணம் என்று அசோக்பவார் மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், தனது மகனின் மரணத்திற்கு பழிவாங்க அசோக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களும் முடிவு செய்துள்ளனர்.
உறவினர்களே குற்றவாளிகள்:
இதையடுத்து, சாமர்த்தியமாக திட்டமிட்டு எந்தவித காயமுமின்றி அவர்கள் 7 பேரையும் அசோக் கல்யாண் பவார் தனது குடும்பத்துடன் இணைந்து கொலை செய்துள்ளார். இது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அசோக் கல்யாண் பவார் (39), ஷாம்கல்யாண் பவார் (35), ஷங்கர் கல்யாண் பவார் (37), பிரகாஷ்கல்யாண் பவார்(24) மற்றும் காந்தாபாய் (45) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த 7 பேர் உடலிலும் எந்தவித காயமும் இல்லாததால் போலீசாரே முதலில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக நம்பியுள்ளனர். சிறு காயம் கூட இல்லாமல் அவர்களை கொலை செய்தது எப்படி? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலைவிபத்தில் உயிரிழந்த மகனின் மரணத்திற்காக மூன்று சிறு குழந்தைகள் உள்பட 7 பேரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.