‛பில்டப் பண்றமோ... ஃபீலா விடுறமோ முக்கியமில்ல... இந்த உலகம் நம்மை உற்று நோக்கணும்’ என வடிவேலு சொல்வது, அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆசை இருக்கும் வரை எதையும் அடக்கி விடலாம், பேராசை வரும் போது, அது நம்மை அடக்கி விடும் என்பதற்கு இங்கு நிறைய உதாரணங்கள் இருந்தாலும், பேராசையின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. புதையலுக்கு ஆசைப்பட்டு, போலி சாமியார்களிடம் பணத்தை இழந்து போன பெண் ஒருவரின் பரிதாப கதை தான் இது. 




புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூரைச் சேர்ந்தவர் முத்துலெட்சுமி. அவருக்கு குடும்பத்தில் ஆயிரம் பிரச்சனை இருந்திருக்கிறது. சாமியாடியிடம் சென்றால், சங்கடம் போகும் என்று யாரோ கூற... விராலிமலையை அடுத்த மருதுபட்டியில், ‛ராசு என்பவர், மாசு குறையாமல் குறி சொல்கிறார்...’ என, சிலர் அவரை அடையாளம் காட்ட, கணவரோடு ராசுவை காண கைநிறைய காசோடு புறப்பட்டார் முத்துலெட்சுமி. ‛கஷ்டம்னு வந்தா... இஷ்டத்திற்கு வசூல் பண்ணலாம்’ என்கிற அடிப்படை அபேஸ் யுக்தி தெரிந்த ராசு, ‛உங்க வீட்டில் புதையல் இருக்கு... உங்க காட்டில் இனி அடமழையிருக்கு’ என , ஏத்தி விட, முத்துலெட்சுமி, பண பித்து லெட்சுமியாக மாறினார். ‛புதையலை கொடுங்க.. உடனே எடுங்க...’ என சாமியாடியிடம் முத்துலெட்சுமி வரம் கேட்க, ‛சொல்றது தான் என் பணி... அதுக்குனே இருக்காரு பூசாரி மணி...’ என, அவர் ஒரு முகவரியை கொடுத்து, பூசாரி மணியை சந்திக்க கூறியுள்ளார். 




மணியை சந்தித்தால்... ‛மணி... மணி... மணி...’ என, மங்காத்தா பாடலாம் என்று மங்களகரமாக மணியிடம் புறப்பட்டார் முத்துலெட்சுமி. ‛வாங்கம்மா வாங்கம்மா... புதையல் இருக்கானு பார்ப்போம் ஃபர்ஸ்... அது தான் இப்போதைக்கு பெஸ்ட்...’ என , மணி மணியான வார்த்தைகளால், முத்துலெட்சுமி குடும்பத்தை நம்ப வைத்துள்ளார் மணி. 


குறித்த நேரத்தில், இடைவெளி இல்லாத தூரத்தில் முத்துலெட்சுமி வீட்டிற்கு வந்து சேர்ந்தார் மணி. புதையல் இருப்பதாக கூறப்படும் இடத்தில், எலுமிச்சை பழங்களை வைத்து பூஜையை தொடங்கினார் மணி. லெமன் நிச்சயம் உதவும் என நம்பினார் அந்த உமன். நம்பிக்கை வீண் போகவில்லை... கீழே இருந்த ஒரு எலுமிச்சை, மேலே உயர ஆரம்பித்தது. ‛என்னடா நடக்குது இங்கே...’ என யோசிப்பதற்குள், ‛ஆத்தா வந்துட்டா... உன் புதையலுக்கு ஆர்டர் தந்துட்டா...’ என, முத்துலெட்சுமியை, பித்து லெட்சுமியாக மாற்றினார் மணி. 


‛சாமிக்கு சக்தி இருக்கு... நமக்கு அவர் மேல பக்தி இருக்கு...’ என புதையலை எடுக்க நாள் குறிக்க கேட்டார் முத்துலெட்சுமி. அந்த சஸ்பென்ஸ் உடைக்கும் என, அட்வான்ஸ் வேண்டும் என முதல் தவணையாக 5 ஆயிரத்தை  அமுக்கிய மணி, ‛இனி உங்களுக்கு எல்லாம் ஹனி’ தான் என இனிப்போடு பேசி, அன்றைய பணியை முடித்தார். பின்னர் ஒருநாளில், தன் சகாக்களுடன் வந்த மணி, ‛இன்றே தோண்டுவோம்... லட்சியத்தை தாண்டுவோம்’ என , முத்துலெட்சுமியிடம் கூற, ‛வாங்க சாமியார்... ஐ ஆம் ஆல்ரெடி தயார்’ என கடப்பாறையோடு கடமையாற்ற புறப்பட்டார். வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் தோண்டத் தொடங்கியதும், பழங்காலத்து சிலைகள், இரும்பு தகடுகள், பழைய காலத்து காசுகள் என ஒன்றிரண்டாய் வந்துள்ளது. 


‛லெட்சுமி... உன் வீட்டுக்கு வந்தாச்சு லெட்சுமி... புதையலை எடு... ஆளை விடு...’ என, அங்கிருந்து புறப்பட தயாரானார் மணி. ‛சாமி... நீங்க செஞ்ச காரியத்தையும்... நடக்கப் போற வீரியத்தையும் நினைச்சா எனக்கு சந்தோசமா இருக்கு... உங்களுக்கு எவ்வளவு வேணும்...’ என முத்துலெட்சுமி கேட்க, ‛ஆல்ரெடி அட்வான்ஸ் ஐயாயிரம்... அத்தோடு நீ தா 75 ஆயிரம் என...’ என டோட்டலா... 80 ஆயிரத்தை வாங்கி மணி, ‛வெயிட் பண்ணு வர்றேன்... புதையலை எடுத்து தர்றேன்...’ என அங்கிருந்து புறப்பட்டார். ‛சரிங்க சாமி... சீக்கிரம் வந்து புதையலை காமி...’ என முத்துலெட்சுமி கூற, ‛கண்டிப்பா வாறேன்... அதுக்கு முன்னாடி ஆட்டோவுக்கு ஆயிரம் தாயேன்...’ என, தனியாக ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு எஸ்கேப் ஆனார் மணி. 




‛சாமியார் வருவாரு... சங்கடம் தீர்ப்பாரு...’ என காலி இடத்தை காவல் காத்துக் கொண்டிருந்த முத்துலெட்சுமிக்கு, அதன் பின் எந்த தகவலும் வரவில்லை. இதற்கிடையில் போலி சாமியார் மணியின், எலுமிச்சை வித்தை ஊர் முழுக்க தெரியவர; புதுக்கோட்டை எஸ்.பி., நிஷா பார்த்திபன், விசாரணைக்கு உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரணையில் இறங்க... புதையலும் புளியோதரையும் இல்லை என்பது தெரியவந்தது. 


புஷ்வானமாய் உயர்ந்து நின்ற ஆசை, புஷ்ஷாய் போனதும், இருந்த 81 ஆயிரமும் இழந்து போன துயரத்தில் துடித்துப் போனார் முத்துலெட்சுமி. ஏற்கனவே வீட்டில் இருந்த ஆயிரம் பிரச்னையில், இது ஆயிரத்து ஒன்றாவது பிரச்னையாக மாறியது. அவரிடம் புகாரை பெற்ற போலீஸ், மணிக்கு மினி ஸ்கெட்ச் போட்டனர். சாமியாடி ராசுவை லெசாக தூசு தட்டி, மணியையும் அவரது மணியான சிஷ்யன் முருகேசனையும் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் ஒருவழியாக பிடித்தது போலீஸ். மண்டையூர் காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், பல இடங்களில் எலுமிச்சையை பறக்கவிட்டு, பணத்தை கறக்க விட்டோம் என்பதை ஒப்புக் கொண்டது அந்த கும்பல்.


ஊசி மூலம் எலுமிச்சைக்குள் பாதரசத்தை செலுத்தி, சிஷ்யன் முருகேசன் மூலம் அதை மேலே பறக்க வைத்து வித்தை காட்டியதை மணி ஒப்புக்கொள்ள, இனி உங்களுக்கு இங்கென்ன வேலை என, சிறையில் அடைத்தனர் போலீஸ். குடும்ப பிரச்சனையை தீர்க்கப் போன இடத்தில், புதிய பிரச்சனையை இழுத்து விட்ட இம்சை சாமியார்களின் கொள்ளை கூட்டணி, இனி சிறையில் தொடரும்!