புதுச்சேரி: 3 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. புதுச்சேரி மாநிலம் மங்கலம் அருகே உள்ள கீழ்சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 60). இவர் கோர்க்காடு ஏரிக்கரை பகுதியில் வாத்து பண்ணை நடத்தி வந்தார். இந்த வாத்து பண்ணையில் அவரது மனைவி சுபா (45). மகன்கள் ராஜ்குமார் (27) சரத்குமார் (25). கன்னியப்பனின் மாமனார் காத்தவராயன் (70) மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாம்பலப்பட்டு பகுதியை சேர்ந்த பசுபதி (21) பெரிய முதலியார்சாவடி சிவா (21) வானூர் மூர்த்தி (21) கண்டமங்கலம் ஆறுமுகம் (58), வில்லியனூர் வேலு (24) ஆகியோர் வேலை செய்து வந்தனர். வாத்துகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று பராமரிக்கும் வேலைக்கு சில சிறுமிகளையும் வேலைக்கு அமர்த்தி இருந்தனர். அவர்கள் வாத்து பண்ணையிலேயே தங்கி இருந்தனர். இந்நிலையில் பண்ணையில் வேலை செய்த 5 சிறுமிகளை அறையில் அடைத்து வைத்து அவர்களை பாலியல் வன்புணர்வு செய்தது தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு மங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.


கடந்த 22.12.2022 அன்று புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் அந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் கன்னியப்பன், சரத்குமார், ராஜ்குமார், பசுபதி, சிவா, மூர்த்தி ஆகிய 6 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. காத்தவராயன், சுபா ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ஆறுமுகத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் இருந்து வேலு என்பவர் விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையே அதே வாத்து பண்ணையில் வேலை செய்த 3 சிறுவர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக குழந்தைகள் நலக்குழுவினர் அந்த சிறுவர்களிடம் விசாரணை நடத்திய போது அது உறுதியானது. பின்னர் 3 சிறுவர்களும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து மங்கலம் போலீசார் 3 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியாக வழக்குப்பதிவு செய்தனர். அதாவது வாத்து பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், சரத்குமார், ராஜ்குமார், வேலு, மூர்த்தி, பசுபதி ஆகிய 6 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


அந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தலைமை நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.  இந்த வழக்கில் பசுபதி மீதான பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.14 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி செல்வநாதன் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட 3 சிறுவர்களுக்கும் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும். இந்த வழக்கில் தொடர்புடைய கன்னியப்பன் உள்பட 5 பேர் மீதும் குற்றம் சரிவர நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜராகி வாதாடினார். சிறுவர்களிடம் ஹோமோசெக்ஸில் ஈடுபட்ட வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பசுபதி, ஏற்கனவே சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது.