புதுச்சேரி: மனைவியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால், வாலிபரை வெட்டி கொலை செய்த நண்பர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Continues below advertisement

மனைவியுடன் அடிக்கடி செல்போனில் பேசிய நபரை கொலை செய்த கணவன்

புதுச்சேரி மாநிலம் உப்பளம் விளையாட்டு மைதானம் பின்புறம் உள்ள கழிவுநீர் வாய்க்கால் பாலத்தின் மீது, வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக ஒதியஞ்சாலை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் புகாரின்பேரில், கண்காணிப்பாளர் ஸ்ருதி, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, கொலை செய்யப்பட்ட வாலிபர், உழவர்கரை பகுதியை சேர்ந்த சந்துரு, (வயது 24) என்பதும், நைனார்மண்டபத்தில் இறைச்சி கடையில் கோழிகளை ஏற்றி, இறங்கும் லோடுமேனாக வேலை செய்ததும் தெரியவந்தது. வாலிபர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Continues below advertisement

தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் 'ரோஜர்' வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீசார் விசாரணையில், கொலை செய்யப்பட்ட வாலிபருடன் வேலை செய்த நைனார்மண்டபம் வெங்கடேஷ் என்பரும் நண்பர்களாக பழகியுள்ளனர். இதற்கிடையே, திருமணத்திற்கு பிறகு வெங்கடேஷ் வம்பாகீரப்பாளையத்தில் உள்ள தனது மனைவி காவியா வீட்டிலேயே கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வந்தார்.

மது அருந்த அழைத்து கொலை

இந்நிலையில், வெங்கடேஷ் வீட்டிற்கு சந்துரு அடிக்கடி சென்ற போது, அவரது மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு, அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதையறிந்த வெங்கடேஷ், இனி தனது மனைவியிடம் பேச வேண்டாம் என சந்துருவை கண்டித்துள்ளார். அதன் பிறகும் சந்துரு, தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த வெங்கடேஷ் தனது நண்பர்கள் உதவியுடன் சந்துருவை கொலை செய்ய திட்டமிட்டு, நேற்று முன்தினம் மனைவி, திருசெந்துார் கோவிலுக்கு சென்றிருந்தபோது, தனது வீட்டிற்கு மது அருந்த சந்துருவை அழைத்தார்.

வெங்கடேஷ் வீட்டிற்கு சென்ற சந்துருவுக்கு மது ஊற்றி கொடுத்துள்ளனர். போதை ஏறியதும், வெங்கடேஷ் தனது நண்பர்களான வம்பா கீரப்பாளையத்தை சேர்ந்த சரண், ராஜேஷ், இணைந்து சந்துருவை சராமாரியாக வெட்டி கொலை செய்தார். பின், சந்துரு உடலை கழிவுநீர் வாய்க்கால் பாலத்தில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில் வந்த அதிர்ச்சி தகவல்

சந்துருவை, நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு அடித்து கொலை செய்தனர். சம்பவம் நடந்தது பகல் நேரம் என்பதால், உடலை வெளியே கொண்டு செல்லாமல், வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளனர். பின், சாவகாசமாக வீட்டில் படிந்திருந்த ரத்த கரைகளை பினாயில் ஊற்றி சுத்தம் செய்துள்ளனர். தொடர்ந்து மூவரும் வேல்ராம்பட்டு ஏரிக்கரைக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.

மீண்டும் நள்ளிரவு வீட்டிற்கு வந்த மூவரும், வீட்டில் மறைத்து வைத்திருந்த சந்துரு உடலை நேற்று அதிகாலை 4 மணி அளவில் 14 மணி நேரம் கழித்து உப்பளம், விளையாட்டு மைதானம் பின்புறம் உள்ள கழிவுநீர் வாய்க்கால் பாலத்தின் மீது வீசிவிட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, வெங்கடேஷ், சரண், ராஜேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.