விழுப்புரம்: மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் காரில் கஞ்சா கடத்திய புதுச்சேரி வாலிபர் கைது செய்யப்பட்டு 2 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
காரில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
விழுப்புரம் அருகே மரக்காணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவலர்கள் தலைமையில் அனுமந்தை பழைய சுங்கசாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் வாகனத்தில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், அவர், புதுச்சேரி மாநிலம் முத்திரைபாளையம், மேற்கு தெருவை சேர்ந்த சேகர் மகன் தமிழரசன் (வயது 35) என தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரிடம் இருந்து, சுமார் 2 கிலோ 135 கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விழுப்புரம் சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற குற்றச்சம்பவங்கள்
மணல் கடத்தல்: திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் மாரங்கியூர் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மணல் கடத்தி வந்த சிலர், மாட்டு வண்டிகளை நிறுத்தி விட்டு தப்பியோடினர். போலீசார் 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
இருதரப்பு மோதல்: 12 பேர் மீது வழக்கு
விழுப்புரம் அடுத்த தளவானுாரைச் சேர்ந்தவர் அன்பரசு மனைவி மகாலட்சுமி, 42; அதே பகுதியைச் சேர்ந்த குணபூஷனம், 60; உறவினர்கள். இரு தரப்பினரும் சேர்ந்து ஊரில் புறம்போக்கு இடத்தில் மாரியம்மன் கோவில் கட்ட ஏற்பாடு செய்தனர். அந்த இடத்தில் மகாலட்சுமி தரப்பினரின் 100 சதுர அடி இடம் சேர்ந்து வருதால், மறுப்பு தெரிவித்தனர். இதனால், தகராறு ஏற்பட்டு திட்டி, தாக்கிக்கொண்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், குணபூஷணம், நாராயணன் உட்பட இருதரப்பைச் சேர்ந்த 12 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கிரிக்கெட் விளையாட்டில் தகராறு: 4 பேர் மீது வழக்கு
விழுப்புரம் சேவியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் மகன் ஷியாம், 23; இவர், தனது தம்பி தேவா, 22; உறவினர் மகன் எழில், 23; ஆகியோருடன் இரு தினங்களுக்கு முன் கிரிக்கெட் விளையாடினர். அப்போது அங்கு வந்த சேவியர், ஸ்ரீபன், 25; ஜெபஸ்டின், 25; ஆகியோர், ஷியாம் தரப்பினரை கேலி செய்து, திட்டினர். இதனால், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீபன், ஜெபஸ்டின், ஷியாம், தேவா ஆகியோர் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரத்தில் பன்றி திருட்டு: 2 பேர் கைது
விழுப்புரம் அடுத்த பானாம்பட்டைச் சேர்ந்தவர் அய்யனார், 35; இவர், ராகவன்பேட்டையில் பட்டியில் பன்றிகள் அடைத்து வைத்திருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, சரக்கு வேனில் வந்த 2 பேர் 25 பன்றிகளை திருடிக்கொண்டு செல்ல முயன்றனர். உடன், அய்யனார் மற்றும் பொதுமக்கள் அவர்கள் இருவரையும் பிடித்து விழுப்புரம் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், புதுச்சேரி மாநிலம், முதலியார்பேட்டை வேல்முருகன் மகன் செல்வம், 23; தவளக்குப்பம் அய்யனார் மகன் மணிகண்டன், 28; என தெரிந்தது. உடன் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து சரக்கு வேனை பறிமுதல் செய்தனர்.