புதுச்சேரி: புதுச்சேரி தவளக்குப்பம் அருகே ஆடித்திருவிழாவை முன்னிட்டு குடும்பத்தினர் கோயிலுக்குச் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி, கப்பல் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

புதுச்சேரி தவளக்குப்பத்தை அடுத்துள்ள நல்லவாடு மீனவர் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் விஜயேந்திரன் (41). இவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் கப்பல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முகுந்தாவதி, ஒரு மகள் மற்றும் மகனுடன் வசசித்து வருகிறார்.

நேற்று நல்லவாட்டில் அமைந்துள்ள புகழ்பெற்ற குட்டியாண்டவர் கோயிலில் ஆடிமாதத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக முகுந்தாவதி தனது பிள்ளைகள் மற்றும் சென்னையிலிருந்து வருகை தந்திருந்த உறவினர்களுடன் வீட்டைப் பூட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றுள்ளார்.

Continues below advertisement

அதிர்ச்சி தந்த காட்சி:

திருவிழா நிகழ்வுகள் முடிந்து இரவில் குடும்பத்தினர் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவு மற்றும் உள்ளே இருந்த 2 பீரோக்களின் கதவுகள் திறந்து கிடப்பதைக் கண்டு முகுந்தாவதி கடும் அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று சோதித்துப் பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 பவுன் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. குடும்பத்தினர் அனைவரும் கோயிலுக்குச் சென்றதை நைஸாக நோட்டமிட்ட மர்ம நபர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

போலீஸார் விசாரணை தீவிரப்படுத்தல்:

இச்சம்பவம் குறித்து முகுந்தாவதி உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் அளித்தார். புகாரின் பேரில் தவளக்குப்பம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தடயங்களைச் சேகரித்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் அச்சம்:

அண்மையில்தான் இதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் 15 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன. அந்தச் சம்பவத்தின் வடு மாறுவதற்குள்ளேயே, தற்போது மீண்டும் 45 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது நல்லவாடு கிராம மக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர் திருட்டில் ஈடுபடும் நபர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் எனப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.