புதுச்சேரி: புதுச்சேரியில் ஒன்பதாம் வகுப்பு மாணவியை காதலிப்பதாகக் கூறி கடத்திச் சென்று, நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

பள்ளிக்குச் சென்ற மாணவி மாயம்:

புதுச்சேரியில் ஒன்பதாம் வகுப்பு மாணவியை காதலிப்பதாகக் கூறி கடத்திச் சென்று, நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற மாணவி மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால் அதிர்ச்சியில் இருந்தனர்.

Continues below advertisement

வாடகை வீட்டில் நடந்த கொடூரம்:

இந்நிலையில், காணாமல் போன சிறுமியை அவரது பெற்றோர் பாகூர் பகுதியில் மீட்டுள்ளனர். அப்போது தனக்கு நேர்ந்த கொடூரத்தை சிறுமி கூறவே பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதுகுறித்து பாகூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 17 வயது சிறுவன் ஒருவன் அந்த மாணவியை காதலிப்பதாகக் கூறி பழகி வந்துள்ளான். சம்பவத்தன்று அந்த மாணவியை பாகூர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு அந்த சிறுவனுடன் அவனது நண்பர்கள் மூன்று பேர் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து சிறுமியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

கைது நடவடிக்கை :

இந்த புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் காதல் நாடகமாடிய 17 வயது சிறுவன் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஆகாஷ் (18) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மற்ற இரு சிறுவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஆகாஷ் தவிர மற்ற மூவரும் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு ஊர் சுற்றி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காதலன் என்ற பெயரில் மாணவியை ஏமாற்றி நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த இச்சம்பவம் புதுச்சேரி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

போக்சோ (POCSO) சட்டம் என்றால் என்ன?

POCSO என்பதன் விரிவாக்கம் "Protection of Children from Sexual Offences Act" என்பதாகும். தமிழில் இது "பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்" என்று அழைக்கப்படுகிறது.

இச்சட்டம் 2012-ஆம் ஆண்டு இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது. 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியான சீண்டல்கள், வன்கொடுமை மற்றும் ஆபாசப் படங்களிலிருந்து பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கம்.

சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

வயது வரம்பு: 18 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர் மற்றும் சிறுமிகள் 'குழந்தைகள்' எனக் கருதப்படுவர். (ஆண், பெண் இருபாலருக்கும் இச்சட்டம் பொருந்தும்).

குற்றத்தின் தன்மை: பாலியல் வன்கொடுமை (Assault), பாலியல் ரீதியான சீண்டல்கள் (Harassment) மற்றும் குழந்தைகளை ஆபாசமாகப் படமெடுத்தல் ஆகியவை கடும் குற்றங்களாகக் கருதப்படும்.

குழந்தை நேய விசாரணை: பாதிக்கப்பட்ட குழந்தையிடம் விசாரணை நடத்தும்போது, அவர்கள் பயப்படக் கூடாது என்பதற்காக காவலர்கள் சீருடை அணியாமல் சாதாரண உடையில் விசாரணை நடத்த வேண்டும்.

அடையாள பாதுகாப்பு: பாதிக்கப்பட்ட குழந்தையின் பெயர், பள்ளி, புகைப்படம் அல்லது ஊர் போன்ற எந்த அடையாளத்தையும் ஊடகங்களிலோ செய்திகளிலோ வெளியிடக் கூடாது. மீறினால் சிறை தண்டனை உண்டு.

தண்டனை விவரங்கள்: இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் (Bail) கிடைப்பது மிகவும் கடினம். குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து தண்டனைகள் வழங்கப்படுகின்றன:

பாலியல் வன்கொடுமை: குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வரை வழங்கப்படலாம்.

பாலியல் துன்புறுத்தல்: 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம்.

தகவல் தெரிவிக்கத் தவறுதல்: ஒரு குழந்தைக்கு பாலியல் தொல்லை நடப்பது தெரிந்தும், அதை காவல்துறைக்குத் தெரிவிக்கத் தவறினால், அவருக்கும் சிறை தண்டனை உண்டு (மருத்துவர்கள், ஆசிரியர்கள் உட்பட).

சிறப்பு நீதிமன்றங்கள்:போக்சோ வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்காகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் "சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள்" அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ஓராண்டு காலத்திற்குள் (1 Year) முடிக்க வேண்டும் என்பது விதிமுறை.