புதுச்சேரி: டியூசன் மாஸ்டரை பெட்ரோல் குண்டு மற்றும் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற தனியார் துணிக்கடை கேஷியர், எதிர்பாராத விதமாக தனது கையிலேயே வெடிகுண்டு வெடித்ததில் படுகாயமடைந்தார். அவரது வலது கை சிதைந்த நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் லாஸ்பேட்டை கபிலன் நகரில் டியூசன் மையம் நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு டியூசன் முடிந்ததும், மாணவர்கள் அனைவரும் சென்ற பிறகு பயிற்சி மையத்தை பூட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது உணவு டெலிவரி ஊழியர் போல் அங்கு வந்த ஒருவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து பிரேம்குமார் மீது வீசியதாக கூறப்படுகிறது. சுதாரித்துக் கொண்ட பிரேம்குமார், அந்த தாக்குதலில் இருந்து தப்பித்து அங்கிருந்து ஓடினார். ஆனால், தாக்குதலுக்கு வந்த நபர் அவரை விடாமல் துரத்திச் சென்றுள்ளார். பிரேம்குமார் மீது நாட்டு வெடிகுண்டை வீச முயன்றபோது, எதிர்பாராத விதமாக அந்த வெடிகுண்டு அவரது கையிலேயே வெடித்தது. இதில், தாக்குதலுக்கு வந்த நபரின் வலது கை கடுமையாக சிதைந்தது.
வெடிச்சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக லாஸ்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், படுகாயமடைந்த நபரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்து மற்றொரு நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாளை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர், காயமடைந்த நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர் புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ரவீந்திரன் டியூசன் மாஸ்டர் பிரேம்குமாரை ஏன் தாக்க முயன்றார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது:
ரவீந்திரனின் மகள், பிரேம்குமாரிடம் டியூசன் சென்று வந்துள்ளார். மகளை அழைத்துச் செல்ல டியூசன் மையத்திற்கு ரவீந்திரனின் மனைவி வருவது வழக்கம். அப்போது பிரேம்குமாருக்கும், ரவீந்திரனின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக ரவீந்திரன் சந்தேகித்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்தேகம் காரணமாக குடும்பத்தில் தகராறு ஏற்பட்ட நிலையில், தற்போது ரவீந்திரனின் மனைவி தனியாக வசித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இதற்கிடையே, பிரேம்குமாரும் ரவீந்திரனின் மனைவியும் தொடர்ந்து பேசிவருவதாக தகவல் கிடைத்ததால், ஆத்திரமடைந்த ரவீந்திரன் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இதற்காக சில நாட்களுக்கு முன்பே அவர் திட்டமிட்டு செயல்பட்டுள்ளார். பட்டாசுகளை வாங்கி, அவற்றைப் பயன்படுத்தி இரண்டு நாட்டு வெடிகுண்டுகளையும், ஒரு பெட்ரோல் குண்டையும் தயாரித்து வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதல் முயற்சி தோல்வியடைந்தால் பிரேம்குமாரை வெட்டுவதற்காக அரிவாளையும் தயார் நிலையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த சில நாட்களாக டியூசன் மையம் மூடப்படும் நேரத்தை கண்காணித்து வந்த ரவீந்திரன், சம்பவத்தன்று இரவு மழை பெய்ததால் மாணவர்கள் சற்று தாமதமாக சென்றதை பயன்படுத்திக் கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
மாணவர்கள் அனைவரும் சென்ற பிறகு பிரேம்குமார் மட்டும் தனியாக டியூசன் மையத்தை மூடிக் கொண்டிருந்தபோது, உணவு டெலிவரி செய்வதுபோல் வந்து முதலில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். அதிலிருந்து பிரேம்குமார் தப்பியோடியதால், அவரைத் துரத்திச் சென்று நாட்டு வெடிகுண்டை வீச முயன்றுள்ளார்.
அப்போது ஏற்பட்ட எதிர்பாராத வெடிப்பில், கொலை செய்ய திட்டமிட்ட ரவீந்திரனே படுகாயமடைந்தார். அவரிடம் இருந்த மற்றொரு வெடிகுண்டு மற்றும் அரிவாளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ரவீந்திரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டியூசன் மாஸ்டரை கொலை செய்ய திட்டமிட்டு பெட்ரோல் குண்டு, நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாளுடன் வந்த நபரே, தனது திட்டம் தவறியதால் கையில் வெடிகுண்டு வெடித்து சிக்கிய சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
