புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த துரை என்கிற மாணிக்கவாசகம் வசித்து வருகிறார். திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் துரை தனது வயதான தாய், தந்தையுடன் அவருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். கட்டிட கட்டுமான தொழில் செய்து வரும் இவர் ஒரு தனியார் வங்கியில் கடன் பெற்றுள்ளதாக கூறுகின்றனர். இந்நிலையில் கடனிற்கான தொகையை திருப்பி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், கடன் கொடுத்த தனியார் வங்கி நிர்வாகம் கடன் தொகையை திரும்ப செலுத்த தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கடனை திருப்பி செலுத்த தாமதம் ஏற்பட்ட காரணத்தினால் தனியார் வங்கி நிர்வாகம் நீதிமன்றத்தை அணுகியது.
இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனிற்காக துரையின் சொத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை தொடர்ந்து வங்கி நிர்வாகம் வழக்கறிஞர் ஆணையத்துடன் கடன் பெற்ற நபரின் வீட்டிற்குச் சென்று சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். ஆனால் நீண்ட நேரத்திற்கு பின்னர் வீட்டிற்குள் துரையின் பெற்றோர் இருந்தது தெரியவந்தது. குறிப்பாக வீட்டை ஆய்வு செய்யாமல் வங்கி நிர்வாகத்தினர் வீட்டை சீல் வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே வீட்டிற்குள் ஆட்கள் இருப்பதாக காவல்துறை மூலம் வழக்கறிஞர் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கவும் சீல் செய்த வீட்டில் இருந்த வயதான தம்பதியர் இருவரையும் வெளியேற்றி சீல் வைத்தனர்.
இதுகுறித்து துரையின் தாயார் சுந்தரி கூறியதாவது:- எனது மகன் மற்றும் மருமகள் வெளியே துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டனர். எனது கணவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு ஆக்சிசன் வைத்துக்கொண்டு வீட்டின் உள்ளே இருந்துள்ளோம். ஆனால் எங்களுக்கு தெரியாமல் வீட்டிற்கு சீல் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் எங்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கவும் வெளியே வந்து பார்த்தபோது சீல் வைத்தது தெரிந்தது. எங்களால் வாசல் கதவை திறக்க முடியவில்லை. சீல் வைக்கும் போது எங்களை அழைத்தார்களா என்று தெரியாது. நாங்கள் வீட்டிற்குள் இருந்ததால் எதுவும் தெரியவில்லை என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல்துறை விளக்கமளித்த போது, "நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் ஆணையம் மூலமாக வங்கி நிர்வாகம் சம்பந்தப்பட்ட நபரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். காவல் துறை தரப்பில் பாதுக்காப்புக்காக சென்றோம். குறிப்பாக வழக்கறிஞர் ஆணைய குழுவினர் வீட்டிற்கு சென்று போது சம்பந்தப்பட்ட நபர் வீட்டை முழுமையாக சாத்திவிட்டு வெளிய சென்றதாக தெரிகிறது. வீட்டிற்கு சீல் வைக்கச் சென்றவர்கள் வீட்டில் ஆட்கள் இருக்கிறார்களா? என்று முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். மேலும் அக்கம் பக்கத்தினரும் அவர்கள் வெளியே சென்றிருப்பதாக கூறவும் வெளியே இருக்கும் இரும்பு கதவை சீல் வைத்துள்ளனர். இதையடுத்து அரைமணி நேரத்திற்கு பின்னர் வீட்டில் ஆட்கள் இருப்பதாக தகவல் வந்தது. இந்த தகவலையடுத்து வழக்கறிஞர் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையறிந்து வீட்டிற்கு வந்த குழுவினர், சீலை நீக்கிவிட்டு வீட்டில் இருந்த வயதான தம்பதியரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். பிறகு மீண்டும் சில் வைத்தனர். இதனையடுத்து அவர்கள் மகன் பெற்றோரை அழைத்து சென்றுவிட்டார் என்றது.
இதில் சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளருக்கு நீதிமன்றம் தரப்பில் இருந்து வீட்டிற்கு வருவது தெரியும், முன்னதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் ஒருவேளை ஆட்கள் இருப்பது தெரிந்து இவ்வாறு சீல் வைத்திருந்தால் அது மனித உரிமை மீறல், சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் நீண்ட நேரமாக வீட்டில் ஆட்கள் இருக்கிறார்களா என்று ஆய்வு செய்துள்ளனர். மேலும் வீட்டின் வளாகத்தில் சென்றும் பார்த்துள்ளனர். அக்கம் பக்கத்தில் தீவிரமாக விசாரித்த பின்னரே வெளி கதவு சீல் வைக்கப்பட்டது. குறிப்பாக உள்ளே கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அவ்வாறு பார்க்கும்போது வீட்டில் யாரும் இல்லை என்பது உறுதியாகவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர் என்று காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி வீட்டிற்கு சீல் வைக்க சென்ற வழக்கறிஞர் ஆணையம் தரப்பை தொடர்பு கொண்டு பேசிய போது, "வங்கியில் பெருந் தொகையை கடனை பெற்றுக்கொண்டு அவற்றை திரும்ப செலுத்தவில்லை. கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதியன்று மீட்பு நடவடிக்கையாக அவரது வீட்டிற்கு சென்றோம். அப்போது 10 நாட்கள் அவகாசம் கேட்டனர். மேலும் கடன் வாங்கிய நபர் தலைமறைவாகி விடுகிறார். அப்போது வீட்டில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருந்த காரணத்தால் அவர்களை கஷ்டப்படக்கூடாது என்பதற்காக மனிதாபிமான அடிப்படையில் தவிர்த்துவிட்டோம். இதற்காக ஒன்றரை மாதம் அவகாசம் கொடுத்திருந்தோம். இதையடுத்து மீண்டும் நீதிமன்ற உத்தரவின்படி 5 காவல் துறையினர் அவர்களின் ஒரு பெண் காவலர், வழக்கறிஞர் ஆணையம், கிராம நிர்வாக அதிகாரி, வங்கி மேலாளர், மற்றும் வங்கி ஊழியர்கள் உட்பட 15 பேர் சென்றோம். நாங்கள் வீடு முழுவதும் ஆய்வு செய்து, நீண்ட நேரம் குரல் கொடுத்தும், பெல் அடித்தும் யாரும் வரவில்லை. மேலும் முழுமையாக மூடப்பட்டு பூட்டியிருந்தது. அதனாலேயே வீட்டிற்கு சீல் வைத்தோம்," என தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்