புதுச்சேரி அருகே எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விசாரணையில், சென்னையில் பல்வேறு இடங்களில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் கைவரிசை காட்டிய ஹரியானாவைச் சேர்ந்த கொள்ளையர்களே இங்கும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. புதுச்சேரி அடுத்த கன்னியக் கோயில் பகுதியில் மணப்பட்டு எஸ்பிஐ கிளை உள்ளது. வங்கி அருகிலேயே ஏடிஎம் மையமும் இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் மையத்தில் பணம் பரிவர்த்தனை மற்றும் கையிருப்புகள் குறித்து வங்கி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.




அப்போது, ஏடிஎம் மையத்தின் பண வைப்பு இயந்திரத்தில் ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்து 500 குறைவாக இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, கடந்த 17-ம் தேதி மாலை முகக்கவசம் அணிந்து வந்த அடையாளம் தெரியாத 3 பேர் 3 டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பணத்தை எடுத்திருப்பது தெரிய வந்தது. அந்த மர்ம நபர்கள், இயந் திரத்தில் தாங்கள் பதிவிட்ட தொகை வந்தவுடன் பணம் இருக்கும் இடத் தின் அருகே உள்ள சென்சாரை மறைத்து விட்டு வெளியே வந்த பணத்தை எடுத்துள்ளனர். சில விநாடிகள் சென்சாரை மறைத்து வைத்திருப்பதால் வெளியே வந்த தொகையை யாரும் எடுக்க வில்லை என்று கருதி, வெளியே வந்த தொகையை இயந்திரம் மீண்டும் கணக்கில் வரவு வைத்துள்ளது. இந்த முறையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி மர்ம நபர்கள் பணத்தை எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.




இது குறித்து கிளை மேலாளர் சாந்தி கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, ஏடிஎம் மையத்தை பார்வையிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. முதற்கட்டமாக ஏடிஎம் அருகில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்ததில், 3 கார்களில் வந்து தனித்தனியாக இறங்கிய 3 பேர் ஏடிஎம் மையத்துக்குள் ஒன்றன்பின் ஒன்றாக நுழைவதும், சிறிது நேரத்துக்குப் பின் அவர்கள் வெளியே வந்து காரில் ஏறிச் செல்வதும் பதிவாகியுள்ளது. கொள்ளையர் பயன்படுத்திய டெபிட் கார்டுகள் யாருடையவை, எந்த முகவரியில் உள்ளது என்பதை கண்டறியும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.




மேலும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய மும்பையில் உள்ள தலைமை நிறு வனத்தை புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் அணுகியுள்ளனர். இதனிடையே, முதற்கட்ட விசாரணையில் சென்னையில் பல்வேறு இடங்களில் எஸ்பிஐ ஏடிஎம்களில் கைவரிசை காட்டிய நபர்களே புதுச்சேரியிலும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. இவர்கள் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.