புதுச்சேரி : புதுச்சேரியை உலுக்கிய 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட கருணாஸை குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் இன்று அறிவித்தது. அவருக்கான தண்டனை விவரம் வரும் மே மாதம் 5-ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

Continues below advertisement

9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு மாணவி, கடந்த 2024 மார்ச் 2-ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது மாயமானார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவம் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19) மற்றும் விவேகானந்தன் (59) ஆகிய இருவரைக் கைது செய்தனர். இதில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் கடந்த செப்டம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார்.

Continues below advertisement

நீதிமன்ற விசாரணை:

இந்த வழக்கு புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. காவல்துறை தரப்பில் 540 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 54 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, 80-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் தடய அறிவியல் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட கருணாஸ் மீது சுமத்தப்பட்ட கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்: பாலியல் நோக்கில் குழந்தையைக் கடத்துதல்., சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்தல் (போக்சோ பிரிவு 6), கொலை செய்தல் மற்றும் ஆதாரங்களை மறைத்தல்.

அரசு தரப்பு வாதம்:

இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் கூறுகையில், "இந்த வழக்கு 'அரிதினும் அரிதான' பிரிவின் கீழ் வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிட்டுள்ளோம். பாதிக்கப்பட்ட சிறுமி 12 வயதுக்குட்பட்டவர் என்பதாலும், இது மிகக் கொடூரமான குற்றம் என்பதாலும் சட்ட நடைமுறைகளின்படி இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு மே 5-ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இன்று தீர்ப்பு வழங்கப்பட்டபோது உயிரிழந்த சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கருணாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.