புதுச்சேரி: புதுச்சேரியில் ஆன்லைனில் டிரேடிங் செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என நம்பி சைபர் மோசடி கும்பலிடம் பெண் உட்பட 8 பேர் ரூ. 65.34 லட்சம் ஏமாந்துள்ளனர். இதுகுறித்து சைபர்கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

ஆன்லைனில் டிரேடிங் மோசடி

புதுச்சேரி ஜி.என்.பாளையத்தை சேர்ந்தவரை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் டிரேடிங் செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதைநம்பி, அவர் மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் டிரேடிங்கில் பல்வேறு தவணைகளாக ரூ. 56 லட்சத்து 19 ஆயிரத்து 500 முதலீடு செய்துள்ளார். பின் அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து, அதன்மூலம்வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. அதன் பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. 

8 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 65 லட்சத்து 34 ஆயிரத்து 360 இழப்பு

இதேபோல், லாஸ்பேட்டையை சேர்ந்த பெண், ஆன்லைனில் வேலை தேடியுள்ளார். இதையடுத்து, வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், பிரபல ஐடி கம்பெனியில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். மேலும், அந்த கம்பெனியில் காலி பணியிடம் உள்ளதாகவும், அப்பணியினை உறுதி செய்ய முன்பணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய அப்பெண் மர்மநபருக்கு ரூ.3 லட்சம் அனுப்பியுள்ளார். அதன்பின், அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

Continues below advertisement

வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் 4 லட்சத்து 5 ஆயிரம், லாஸ்பேட்டையை சேர்ந்தவர் 85 ஆயிரம், அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் 22 ஆயிரம், மூலக்குளத்தை சேர்ந்தவர் 41 ஆயிரத்து 400, வாணரப்பேட்டைச் சேர்ந்தவர் 26 ஆயிரத்து 460, கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் 35 ஆயிரம் என 8 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 65 லட்சத்து 34 ஆயிரத்து 360 இழந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் எச்சரிக்கை மற்றும் அறிவுரை 

புதுச்சேரி இணைய வழி போலீசார், “இணையத்தில் ஏதேனும் பொருளை வாங்கும் முன்பும் அதன் உண்மைத் தன்மையை நன்கு ஆராய்ந்து, விற்பவரின் முழுமையான விபரங்களையும் சரிபார்த்து பார்த்த பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சமூக ஊடகங்களில் தோன்றும் கவர்ச்சியான விளம்பரங்களை உடனடியாக நம்பி பணம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

மோசடிக்கு ஆளானவர்கள் உடனடியாக புகார் அளித்தால், குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணி எளிதாகும் என்பதால், எந்த குற்றச்சம்பவத்தையும் மறைக்காமல் உடனடியாக தகவல் தருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  

எங்கே, எப்படி புகார் அளிப்பது?

இணைய குற்றச்செயல்களுக்கு உள்ளானால் அல்லது சந்தேகத்துக்கிடமான எந்த தகவலையாவது காணும்போது, பொதுமக்கள் பின்வரும் வழிகளைப் பயன்படுத்தி புகார் அளிக்கலாம்:  

  • தேசிய அளவிலான இலவச உதவி எண்: 1930
  • புதுச்சேரி சைபர் செல் எண்கள்: 0413-2276144 / 9489205246
  •  மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in
  • இணைய தளம்: www.cybercrime.gov.in 

விழிப்புணர்வே பாதுகாப்பு

ஆன்லைன் உலகில் அதிகரித்து வரும் போலி விளம்பரங்கள் மற்றும் மோசடிகளைத் தடுக்க காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், பொதுமக்கள் தங்களுக்குள் விழிப்புணர்வை வளர்த்துக்கொள்வது தான் மிகச் சிறந்த பாதுகாப்பு. குறிப்பாக பண்டிகை நாட்களில் வரும் சலுகை விளம்பரங்களைப் பார்த்து உடனடியாக நம்பாமல் சற்று ஆராய்ச்சி செய்தால், பெரும் இழப்புகளை தவிர்க்கலாம்.