புதுச்சேரி: ஸ்டார்லிங்க் என்ற செல்போன் செயலியில் முதலீடு செய்தால் 30 நாளில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 100க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாயை சைபர் கிரைம் கும்பல் மோசடி செய்துள்ளது.

முதலீடு செய்தால் 30 நாளில் இரட்டிப்பு பணம் - 100க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி மோசடி

'மல்டி லெவல் மார்க்கெட்டிங்' அடிப்படையில், 'ஸ்டார் லிங்க்' என்ற செயலியில் முதலீடு செய்தால் 30 நாளில் இரட்டிப்பு பணம் தருவதாக, சமூக வலைதளத்தில் தகவல் வைரலானது. மேலும், இந்த செயலியில் ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தவருக்கு தினமும் ரூ.400 வங்கி கணக்கில் வரவு வைத்த விபரங்களை பதிவிட்டு, மேலும், புதிய நபர்களை சேர்த்துவிட்டால் 8 சதவீதம் கமிஷன் தொகை தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை நம்பி புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளை சேர்ந்த பலர், மர்ம நபர்கள் அனுப்பிய 'லிங்க்'கில் இணைந்து கோடி கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். அவ்வாறு முதலீடு செய்தவர்களுக்கு 30 நாட்கள் முடிந்த நிலையில், இரட்டிப்பு பணம் தராமல், மர்ம நபர்கள் தங்கள் இணைப்பை துண்டித்ததுடன், முதலீடு செய்தவர்களின் மொபைலுக்கு அனுப்பிய செயலிகளையும் காணாமல் போக செய்துள்ளனர்.

அதன்பிறகே, போலி செயலியில் பணத்தை முதலீடு செய்து, ஏமாந்தது தெரியவந்தது. புதுச்சேரியில் இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட சிலர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்யபட்டு விசாரணை நடைபெற்று வருகின்றனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில்,

ஆன்லைன் வர்த்தக முதலீடு தொடர்பாக மொபைல் செயலிகளில் யாரும் பணம் செலுத்த வேண்டாம் என பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும், புதிது, புதிதாக வரும் முதலீடு தொடர்பான செயலிகளில் பொதுமக்கள் பணம் செலுத்தி ஏமாறுவது தொடர்கதையாக உள்ளது.

அதுபோல், தற்போது புதிதாக 'ஸ்டார்லிங்க்' என்ற செயலியில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என 100க்கும் மேற்பட்டோர் பல கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். புதுச்சேரியில், இதுவரை 10க்கும் மேற்பட்டோர், ரூ.10 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்து ஏமாந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். எனவே, பொதுமக்கள் யாரும் இதுபோன்ற ஆன்லைனில் வரும் எந்தவித முதலீடு தொடர்பான செயலிகளை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.

அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.

வங்கி OTP எண் சொல்லாதீங்க

மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.