2021 ஜூன் மாதத்தை மொத்தமாக அபகரித்த பப்ஜி மதன், 2022ல் பிப்ரவரி மாதத்தை மீண்டும் தன் கையில் எடுத்திருக்கிறார். பப்ஜி விளையாட்டை முன்வைத்து அவர் செய்த லீலைகளின் அடிப்படையில் கைது செய்து, குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதன், கடுமையான தண்டனையை அனுபவித்து வருகிறார் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவர் அங்கும் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
சிறைக்குள் சொகுசு வாழ்க்கை வாழ நேரடி பேரம் பேசப்பட்டு, அதற்காக மதன் மனைவியிடம் 25 ஆயிரம் ரூபாய் ஆன்லைன் மூலம் லஞ்சமும் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறைக்காவலர் ஒருவர், மதன் மனைவி கிருத்திகாவிடம் பேரம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொகுசு கார் சர்ச்சை!
பப்ஜி மதன் கைதின் போது, ஜாமினில் வந்த அவரது மனைவி கிருத்திகாவிடம், ‛சொகுசு கார் எப்படி வந்தது’ என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த கிருத்திகா, ‛தங்களிடம் எந்த சொகுசு காரும்... இல்லை என்றும், ஆடி கார் மட்டுமே உள்ளதாக’ பதிலளித்தது, கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதன் பின் தன்னை பார்க்க வந்த மனைவியிடம், ‛சொகுசு கார் இல்லை என்று சொல்லாதே... நம்மிடம் இருப்பது சொகுசு கார் தான்...’ என மதன் கூறியதும் நடந்தது.
காரில் சொகுசு இல்லை என்று கூறிய கிருத்திகா, தன் கணவரின் சொகுசுக்காக சிறைகாவலரிடம் பேரம் பேசி, அதற்காக பணமும் அனுப்பியுள்ளார். இதையும் அவர் சொகுசு இல்லை என்ற கூட சொல்லலாம். காரணம், அவர்கள் எண்ணத்தில் சொகுசு என்பது விண்ணில் மிதப்பதாக இருக்கலாம். ஆனால், ஒரு குற்றவாளி, அதிலும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு சொகுசு வாழ்க்கை கிடைப்பதெல்லாம் நம்ம சிறைச்சாலைகளில் தான்.
பப்ஜி மதன் வழக்கு விபரம் சுருக்கமாக!
பப்ஜி என்ற இணையதள விளையாட்டில் ஆபாசமாக பேசி யூ டியூப்பில் வீடியோ பதிவேற்றம் செய்ததாகவும், பப்ஜி விளையாட்டு மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை போலீசார் கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர். பின்னர், அவரது மனைவி கிருத்திகாவை மட்டும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். மதன் தற்போது புழல் சிறையில் உள்ளார். அவர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது. அவர்கள் மீதான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதன் மற்றும் அவரது மனைவி மீதான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
அந்த குற்றப்பத்திரிகையில் மொத்தம் 600 பக்கங்கள் இடம்பெற்றுருந்தது. மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா மீதான வழக்கில் மொத்தம் 32 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பப்ஜி மதன் மீது மொத்தம் 150-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தநிலையில், மொத்தம் 32 பேர் மட்டும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். இதுமட்டுமின்றி, கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்வதாக கூறி ரூபாய் 2 ஆயிரத்து 848 நபர்களிடம் ரூபாய் 2 கோடியே 89 லட்சம் ரூபாய் பணமோசடி செய்ததாகவும் காவல்துறை தரப்பில் மதன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் மதனின் மனைவி கிருத்திகா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்