கர்ப்பிணி பெண் உயிரிழப்பு


விழுப்புரம் : தவறான அறுவை சிகிச்சையால் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை முன்பு உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் அணிவகுத்து நின்றன. 


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கம்பந்தூர் கிராமத்தை சேர்ந்த அஜித் குமார் என்பவரின் மனைவியான திவ்யாவிற்கு நேற்று  மாலை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்துள்ளது.  இதனையடுத்து பெண்ணுக்கு தொடர்ந்து அதிக அளவில் ரத்தப்போக்கு  ஏற்பட்டதால் இன்று அதிகாலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மருத்துவமனையில் திவ்யா மாலை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்


மருத்துவமனையில் மருத்துவர்களின் கவனக்குறைவு மற்றும் அலட்சியம் காரணமாக தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்டதால்தான்  பெண் உயிர் இழந்ததாக கூறி இறந்த பெண்ணின் உறவினர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை எதிரே  சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்தும் படுத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


இதனையடுத்து விக்கிரவாண்டி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களின் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு சென்றனர். மறியல் காரணமாக சுமார் இரண்டு கிலோமீட்டர் அளவிற்கு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.