டெல்லியில்  வரதட்சணை கேட்டு கர்ப்பிணி போலீஸ் கமாண்டோவை கணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Continues below advertisement

இதுதொடர்பாக வெளியான தகவலின்படி, இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவின் SWAT குழுவில் பணியாற்றிய 27 வயது பெண் கமாண்டோ காஜல் சௌத்ரி என தெரிய வந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்த அவர், ஹரியானாவின் சோனிபட்டில் வசிக்கும் அங்கூரை சந்திக்க நேர்ந்தது. பின்னர் அவர்களுக்குள் மலர்ந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. கிட்டதட்ட ஒரு வருடம் கழித்து இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது. அங்கூர் டெல்லியில் பாதுகாப்பு அமைச்சகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வருகிறார். 2024ம் ஆண்டு இந்த தம்பதியினர் டெல்லிக்கு குடிபெயர்ந்துள்ளனர். 

சமீபகாலமாக இந்த தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக வரதட்சணைக் கேட்டு கணவர் அங்கூர் மற்றும் அவரது குடும்பத்தினரால் தொடர்ந்து காஜல் சௌத்ரி துன்புறுத்தப்பட்டுள்ளார். இதனிடையே இந்த தம்பதியருக்கு ஒன்றரை வயது மகன் உள்ள நிலையில் மீண்டும் காஜல் கருத்தரித்தார். அவர் 4 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி டெல்லி நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் நிகிலுக்கு காஜலிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது. 

Continues below advertisement

அதில் பேசிய அங்கூர் உனது சகோதரியை கொன்று விட்டேன் என சர்வ சாதாரணமாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த நிகில் உடனடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த நிலையில் அங்கு காஜல் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பேச்சு மூச்சுன்றி கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு முதலில் டெல்லியின் மோகன் கார்டனில் உள்ள தாரக் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து காசியாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு காஜல் மாற்றப்பட்டார், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜனவரி 27ம் தேதி அவர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கூர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக பேசிய காஜலின் தந்தை, திருமணம் நடந்த 15 நாட்களுக்குப் பிறகு காஜலை அங்கூர் துன்புறுத்த தொடங்கினார் என்றும்,  அங்கூரின் குடும்பத்தினர் கார் மற்றும் வரதட்சணை கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அவர்கள் வீட்டில் நடத்தப்பட்ட தடயவியல் பரிசோதனையில் கதவு மற்றும் ஒரு உடற்பயிற்சி டம்பள்ஸில் இரத்தக்கறைகள் இருப்பது தெரிய வந்தது.  இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அங்கூர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.