Police Encounter: கடலூரில் தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.


கொள்ளையன் மீது துப்பாக்கிச் சூடு


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சித்திரப்பாடியில் தப்பியோட முயன்ற  கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். ஸ்டீபன் என்ற கொள்ளையனை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது போலீசாரை தாக்கிவிட்டு கொள்ளையன் தப்பிச் செல்ல முயன்றதால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த ஸ்டீபன் காலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


அண்ணாமலை நகரில் வீடு ஒன்றில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஸ்டீபனை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இவர் மீது திருச்சி, நாகை, தஞ்சை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 25-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அடுத்தடுத்த கொலைகள்


திருநெல்வேலியில் முன்னாள் உதவி காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன், வக்ஃபு வாரிய நிலம் தொடர்பான பிரச்னையால் அண்மையில் வெட்டிக் கொல்லப்பட்டார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே சேலத்தைச் சேர்ந்த ரவுடி ஜான் என்பவர், மனைவி முன்பே 5 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டார். சென்னை கோட்டூர்புரத்தில் இரண்டு ரவுடிகள், எட்டு பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அடுத்தடுத்த கொலை சம்பவங்களால் பொதுமக்களிடையே பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் தான் கடலூரில் கொள்ளையன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அடுத்தடுத்து போலீசாரின் என்கவுன்டர்கள் அரங்கேறிய நிலையில், நடப்பாண்டில் அந்த அதிரடி நடவடிக்கைகள் சற்றே ஓய்ந்து இருந்தது. ஆனால், அடுத்தடுத்து நடக்கும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களால், போலீசார் மீண்டும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.