தமிழ்நாட்டில் சில நாட்களாக நடைபெற்றுவரும் தொடர் கொலைகள் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. கொலைகள் எல்லாம் சாதாரண கொலைகள் அல்ல ரத்தம் தெறிக்க தெறிக்க மிக கொடூரமான முறையில் நடைபெற்றவை. அதில் ஒரு சில கொலையில் கொலை செய்யப்பட்டவர்களின் தலை துண்டிக்கப்பட்டது தான் அதிர்ச்சியின் உச்சம். திமுக ஆட்சியில் ரவுடிகளின் அராஜகம் அதிகமாகும் என்ற குற்றச்சாட்டு தேர்தலுக்கு முன்பிருந்தே எதிர்கட்சிகளால் சொல்லப்பட்டு வந்தது. அதனால் தான், பிரச்சாரத்திலெல்லாம் தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு முறையாக இருக்கும் என்று ஸ்டாலின் சொல்லிவந்தார். சொன்னது போலவே முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டதோடு காவல்துறையையும் தன் வசம் வைத்துக்கொண்டார். தமிழ்நாடு முழுவதும் பவர்ஃபுல்லான காவல்துறை அதிகாரிகளை நியமித்ததோடு டி.ஜி.பியாக சைலேந்திரபாபுவை நியமித்தார். ஆனாலும் எங்கேயோ சறுக்கல். சில நாட்களாக நடைபெறும் தொடர் வழிப்பறி, கொலை, கொள்ளை என்று செய்திகள் முழுவதும் ரத்தக்களறியாகவே இருக்கிறது.



கடந்த சில நாள்களில் நடைபெற்ற கொலைகளை மட்டும் கணக்கில் பார்த்தால், எருமையூர் வெற்றிவேல் தலை துண்டிக்கப்பட்டு கொலை, கீழச்சேவல் சங்கர சுப்பிரமணியன் தலை துண்டிக்கப்பட்டு கொலை, அதே பகுதியில் மாரியப்பன் என்பவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை, வாணியம்பாடி வசீம் அக்ரம் தலை துண்டிக்கப்பட்டு கொலை, ரவுடி மயிலை சிவக்குமாரின் கூட்டாளி ரவுடி கோபி தலை துண்டிக்கப்பட்டு கொலை, திண்டுக்கல்லில் நிர்மலாதேவி என்ற பெண் தலை துண்டிக்கப்பட்டு கொலை, அதே மாவட்டத்தில் அதே நாளில் ஸ்டீபன் ராஜ் என்பவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை, கடலூரில் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட கிருஷ்ணனின் மனைவி காந்திமதி கொலை என்று பட்டியல் நீள்கிறது.



டிஜிபி சைலேந்திர பாபு 


இப்படி தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைகள் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் தான், டிஜிபி சைலேந்திர பாபுவின் உத்தரவின் பேரில் ரவுடிகள் வேட்டையைத் தொடங்கியது தமிழ்நாடு காவல்துறை. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரவுடிகளின் பட்டியலை ஏ,பி,சி,டி என்று வகைப்படுத்தி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வேட்டையைத் தொடங்கியது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை நடைபெற்ற 48 மணி நேர வேட்டையில் தலைமறைவு குற்றவாளிகள், கண்காணிப்பில் உள்ள ரவுடிகள், கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 5 துப்பாக்கிகள், 934 அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.
கொலை பின்னணி கொண்டவர்கள், பிடிவாரண்ட் உள்ள ரவுடிகள், ஏ+ கேட்டகரி ரவுடிகளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிலர் நன்னடத்தை சான்றில் கையொப்பமிட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.


தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் ரவுடிகள் நடந்துகொண்டால் பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் என்று சற்று கடுமையாகவே எச்சரித்திருக்கிறார் சைலேந்திரபாபு. குற்றச்செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், காவல்துறையினர் ரவுடிகள் வேட்டை நடத்திக்கொண்டிருந்த நேரத்திலேயே சென்னை எம்.ஜி.ஆர் நகரில் ரவுடி காளி என்பவரை சுற்றிவளைத்த ஒரு கும்பல் சாரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளது அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. தற்போது நடைபெற்றுள்ள பெரும்பாலான கொலைகள் முன்விரோதத்தில் பலிக்குப் பலியாக நடத்தப்பட்டவை. இதில் மற்றொரு அதிர்ச்சிக்குரிய விஷயம் இந்த கொலைகளில் சிறுவர்களும் ஈடுபட்டிருப்பது தான். சிறார் ரவுடிகள் மேலும் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் அரசுக்கு இப்போது உருவாகியிருக்கிறது.

இந்த பழிக்குப் பழி கொலைகளை தடுத்து நிறுத்தாத வரை, ரவுடிகளை ஒடுக்காத வரை காவல்துறையின் காக்கிச்சட்டையில் ரத்தக்கறை படிந்துகொண்டே தான் இருக்கும்.