வேலை செய்த வீட்டில் 40 சவரன் நகையை திருடி அதை அடகு வைத்து, புதிய இரு சக்கர வாகனம், வெள்ளி கொலுசுடன் பொங்கல் கொண்டாடிய குடும்பத்தை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, அம்பத்துார் அடுத்த கொரட்டூர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 39வது தெருவை சேர்ந்தவர் 45 வயதான சந்திர சேகர். இவர் பட்டரைவாக்கத்தில் சுயமாக இயந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.


கடந்த, 26ம் தேதி காலை திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்வதற்காக வீட்டின் லாக்கரை திறந்தபோது, அதில் இருந்த 40 சவரன் நகைகள் காணாமல் போய் இருந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த நகையின் உரிமையாளர் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 


ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் உத்தரவின் படி, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்றது. அப்பொழுது, சந்திரசேகர் வீட்டில் வேலை செய்தவர்கள் மீது சந்தேகம் எழுந்ததன் அடிப்படையில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. 


திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, மேல்புழுதுார் கிராமத்தை சேர்ந்த 27 வயதான விக்னேஷ், மற்றும் அவரது மனைவி சத்யா ஆகியோர், இரண்டு ஆண்டுகளாக சந்திரசேகர் வீட்டின் அருகில் தங்கியிருந்து, வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளனர். இவர்கள் இருவரையும் அடிக்கடி பார்பதற்காக கொரட்டூர் பகுதியில் வசித்து வந்த சத்யாவின் தங்கை லட்சுமி, அவரது கணவர் பிரகாஷ் ஆகியோர் அங்கு வந்து செல்வது தெரியவந்துள்ளது.


மேற்கண்ட நால்வரும் பொங்கல் விடுமுறைக்காக, கடந்த 10ம் தேதி சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் அவர்களை தேடி விசாரிப்பதற்காக திருவண்ணாமலை விரைந்தது. இந்தநிலையில், கடந்த, 12ம் தேதி, 85 ஆயிரம் ரூபாய்க்கு புதிய இரு சக்கர வாகனம், 1.75 லட்சம் ரூபாய்க்கு, தங்களுக்கும், வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, 12 ஜோடி புதிய வெள்ளி கொலுசு, புத்தாடைகள் ஆகியவற்றை அவர்கள் வாங்கியது தெரியவந்தது.


இதையடுத்து, நால்வரையும் நேற்று காலை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 27 சவரன் நகை, ஒரு இரு சக்கர வாகனம், 12 ஜோடி வெள்ளி கொலுசு மற்றும் 1.80 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அதேபோல், வழக்குபதிவு செய்த 24 மணி நேரத்தில் விரைவாக செயல்பட்டு திருடு போன நகையை பறிமுதல் செய்து திருடியவர்களை கைது செய்த தனிப்படை காவல்துறையினரை  உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண