பெரம்பலூர் நகராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு ஜூலி என்கிற மனைவியும், ரோஹித் ராஜ் (வயது 14), பிரவீன்ராஜ் (12), பவுன்ராஜ் (8) ஆகிய 3 மகன்களும் உள்ளனர். கணேசன் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பூக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மூத்த மகன் ரோஹித் ராஜ் 9-ம் வகுப்பு பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தந்தையுடன் பூக்கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். தற்போது வேலைக்கு ஏதும் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி  இரவு 7.15 மணியளவில் இந்திரா நகரில் இருந்து அங்காளம்மன் கோவில் செல்லும் சாலையில் உள்ள சமுதாய கழிவறையில் இருந்து ரோஹித் ராஜ் உடலில் பலத்த வெட்டு காயங்களுடன் தன்னை காப்பாற்றுமாறு தலை தெறிக்க வெளியே வந்து மெயின் ரோட்டுக்கு செல்வதற்காக ஓடி வந்தார். ஆனால் சிறிது தூரத்திலேயே சாலையில் சரிந்து கீழே விழுந்த ரோஹித் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பெரம்பலூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.




இதனை தொடர்ந்து  ரோஹித் ராஜின் உடலை அவரது உறவினர்கள் பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இதையடுத்து ரோஹித் ராஜின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சமுதாய கழிவறையில் மதுபாட்டில்கள் நொறுங்கியும், அதனை சுற்றி ரத்த கறையும் இருந்தது. இதனால் மர்ம கும்பல் ரோஹித்ராஜை அழைத்து சென்று மது அருந்தி காலி மது பாட்டில்கள் உள்ளிட்டவையால் குத்தி விட்டு தப்பியிருக்கலாம். இதில் பலத்த காயமடைந்த ரோஹித் ராஜ் உயிரிழந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் ரோஹித்ராஜை அவரது நண்பர்களே சேர்ந்து முன்விரோதம் காரணமாக கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் அதே பகுதியை சோ்ந்த 21 வயதுடைய நபர் உள்பட 8 பேர் மீது சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.




சிறுவனை மது பாட்டிலால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூரில் தொடர் திருட்டு, வழிப்பறி நடைபெற்று வருவதை தொடர்ந்து தற்போது கொலை சம்பவம் அரங்கேறி இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் காவல்துறையின் தீவிர விசாரனையில் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் நேற்று 5 பேரை பிடித்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.