திருச்சி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை முன்கூட்டியே தடுக்கவும் திருச்சி மத்திய மண்டல போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், 2 நாட்களில் 34 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Continues below advertisement

இவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மட்டுமின்றி, கார் மற்றும் இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், நீண்ட நாட்களாக போலீசாரால் தேடப்பட்டு வந்த 7 பிடியாணை குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வாகன தணிக்கையின்போது கொலை சதித்திட்டம் ஒன்றும் முறியடிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 9 மாவட்டங்களில் போலீசார் நடத்திய இந்த அதிரடி வேட்டை ரவுடிகள் மத்தியில் பெரும் கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

9 மாவட்டங்களில் அதிரடி சோதனை

தீபாவளி பண்டிகை காலங்களில் பொதுமக்கள் புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிகள், வணிக நிறுவனங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வது வழக்கம். இதனை பயன்படுத்தி வழிப்பறி, திருட்டு, மோதல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் சிலர் ஈடுபட வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, திருச்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கடந்த 8 மற்றும் 9-ந் தேதிகளில் சிறப்பு அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக, அந்தந்த மாவட்டங்களில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பது, ரவுடிகள் மற்றும் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பது, நீண்ட நாட்களாக கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வது ஆகியவை அமைந்திருந்தன.

இதற்காக மாவட்டம் முழுவதும் போலீசார் தனிப்படைகளாக பிரிந்து களத்தில் இறங்கினர். சந்தேகத்துக்கிடமான நபர்களின் வீடுகள், அவர்கள் தங்கியிருக்கும் இடங்கள் மற்றும் குற்றவாளிகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனுடன் முக்கிய சாலைகள், சந்திப்புகள் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் வாகன தணிக்கையும் நடைபெற்றது.

608 ரவுடிகள் பட்டியல் ஆய்வு

இந்த சிறப்பு நடவடிக்கையின்போது 608 சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவர்களின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சந்தேக நபர்களின் வீடுகள் உள்பட மொத்தம் 693 வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். இதுதவிர, 368 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த அதிரடி நடவடிக்கையின் பலனாக 9 மாவட்டங்களிலும் மொத்தம் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் தொடர்புடைய 34 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

மாவட்ட வாரியாக கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை

திருச்சி மாவட்டத்தில் 7 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 பேரும், கரூர் மாவட்டத்தில் ஒருவரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 2 பேரும், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருவரும், திருவாரூர் மாவட்டத்தில் 5 பேரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2 பேரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் 7 பேரும், திருவாரூர் மாவட்டத்தில் 5 பேரும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட 34 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வானங்கள் மற்றும் கத்தி, அரிவாள் பறிமுதல்

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அதன்படி, ஒரு நான்கு சக்கர வாகனம், 3 இருசக்கர வாகனங்கள், 4 கத்திகள், 9 அரிவாள்கள், ஒரு கிரிக்கெட் மட்டை மற்றும் ஒரு மரக்கட்டை ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

குறிப்பாக, 9 அரிவாள்கள் மற்றும் 4 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது போலீசாரின் சோதனையில் ஆயுதங்களுடன் சிலர் நடமாடியிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்படுபவர்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

7 பிடியாணை குற்றவாளிகள் சிக்கினர்

இதற்கிடையே, பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் நீண்ட நாட்களாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த 7 குற்றவாளிகள் இந்த சிறப்பு சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிடியாணைகளை நிறைவேற்றும் வகையில் போலீசார் மேற்கொண்ட தொடர் தேடுதல் நடவடிக்கைக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. கைது செய்யப்பட்ட 7 பேரும் நீதிமன்ற நடவடிக்கைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் கஞ்சா தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டு நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த ஒரு குற்றவாளியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதன் மூலம் ரவுடிகள் மட்டுமின்றி போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் கொடுங்குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கும் இந்த அதிரடி வேட்டையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கொலை சதித்திட்டம் முறியடிப்பு

இந்த சிறப்பு நடவடிக்கையின்போது மேற்கொள்ளப்பட்ட வாகன தணிக்கையில் மற்றொரு முக்கிய சம்பவமும் அரங்கேறியுள்ளது. போலீசார் நடத்திய தீவிர சோதனையின்போது கொலை சதித்திட்டம் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த சதித்திட்டத்தில் தொடர்புடையவர்களை போலீசார் கண்டறிந்து அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். பண்டிகை நேரத்தில் திட்டமிட்டு குற்றச் சம்பவங்களில் ஈடுபட முயன்றவர்களின் நடவடிக்கையை போலீசார் தடுத்து நிறுத்தியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 400 வழக்குகள்

இதற்கிடையே, 9 மாவட்டங்களிலும் நடைபெற்ற வாகன தணிக்கையின்போது போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாகவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

குறிப்பாக, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களை கண்டறிந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக மட்டும் மொத்தம் 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகையின்போது சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரிக்கும் என்பதால், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தங்களது உயிருக்கு மட்டுமின்றி சாலையில் செல்லும் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

9 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு ஐ.ஜி. அறிவுரை

இதுதொடர்பாக திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 9 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவோர், சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவோர் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்களை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் நடவடிக்கைகளை அவ்வப்போது ஆய்வு செய்து, அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தலைமறைவாக இருந்தால் அவர்களை கண்டறிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள பிடியாணைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடங்கப்பட்ட இந்த சிறப்பு அதிரடி சோதனை, பண்டிகை காலம் முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து நடைபெற வாய்ப்புள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.