புதுவையில் முன்விரோத தகராறில் பிளம்பரின் வீட்டில் வெடிகுண்டுகள் வீசிய 3 சிறுவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புதுச்சேரி அரும்பார்த்தபுரம் புதுத்தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 60) கொத்தனார். இவரது மனைவி ருக்மணி. இவர்களது மகன்கள் மகேஷ் (29), மகேந்திரன் (26) பிளம்பராக உள்ளார். இவர்களது உறவினர் ஒருவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு காரில் வந்த மற்றொருவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தனது உறவினருக்கு ஆதரவாக மகேந்திரன் சென்றுள்ளார்.
இந்த நிலையில் வில்லியனூர் அருகே உள்ள மணவெளி பகுதியை சேர்ந்த சிவா (60) என்பவர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது மகேந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் சிவாவை தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அங்கு வைத்து இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டனர். இருப்பினும் சிவா, அவரது மகன் பாவாடைராயன் தரப்பினர் ஆத்திரத்தில் இருந்து வந்ததால் முன்விரோதம் தொடர்ந்தது.
இந்தநிலையில் இன் று இரவு 8 மணியளவில் ருக்மணி, மகேஷ் ஆகியோர் வீட்டில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மகேசிடம், மகேந்திரனை எங்கே என்று கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் மகேஷ் தாக்கப்பட்டார். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தாங்கள் மறைத்து வைத்து இருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை மகேசின் வீட்டின் முன் வீசினர். இதில் அந்த குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனை பார்த்ததும் மகேஷ் வீட்டுக்குள் ஓடினார். குண்டுகளை வீசிய ஆசாமிகள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் மகேஷ் புகார் செய்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு சிதறி கிடந்த வெடிமருந்து உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
தொடர்ந்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் பிளம்பரான மகேந்திரனின் வீட்டில் 17 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் வெடி குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். முன்விரோத தகராறில் மிரட்டுவதற்காக வீடு மீது வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்