ஹைதராபாத்தில் திருமணம் மீறிய உறவில் இருந்த பெண் தன் காதலனுடன் இணைந்து திட்டமிட்டு தன் மூன்று வயது குழந்தையை கொலை செய்த செயல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் இந்தக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டு உயிரிழந்த அதிர்ச்சித் தகவல் உடற்கூராய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.


பரத் குமார் எனும் குழந்தை கடந்த ஜூலை 8ஆம் தேதி மூஷிர்பாத் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ராம் நாகர் மோகன் நகரில் உள்ள முத்தலா ரவி என்பவரது வீட்டில் உயிரிழந்து கிடந்தார். தொடர்ந்து குழந்தையின் உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டது, அதன்படி, அவர் தலையில் பலமுறை பலமான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தது முன்னதாகத் தெரியவந்தது.


அதனைத் தொடர்ந்து ரவி கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குழந்தையின் தாய் போகண்டி நாக லட்சுமியுடன் அவர் திருமணம் மீறிய உறவில் இருந்தது தெரிய வந்தது.


இந்நிலையில், முன்னதாக இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும்போதெல்லாம் குழந்தை தொடர்ந்து இடையூறாக இருந்து வந்ததால் கோபமடைந்து குழந்தையைக் கொலை செய்யத் திட்டமிட்டதை ரவி விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.


அதன்படி குழந்தையின் தாய், குழந்தையை அங்கன்வாடியில் இறக்கிவிட்டு தன் கணவருடன் ஹை டெக் சிட்டிக்கு சென்றுள்ளார். தொடர்ந்து நேர விரயம் செய்து குழந்தையை அங்கன்மையத்தில் இருந்து குடும்ப நண்பர் ரவியை அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளார்.


தொடர்ந்து ரவி தன் வீட்டுக்கு பரத்தை தூக்கிவந்து அங்கு அவரை சித்திரவதை செய்துள்ளார். மேலும் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தும் கடுமையாகத் தாக்கியும் கொலை செய்துள்ளார்.


இந்த உண்மையை நாகலட்சுமி காவல் துறையினரிடம் தெரிவிக்காமல் மறைத்த நிலையில், முன்னதாக குழந்தை பரத் நாற்காலியில் இருந்து கீழே விழுந்து தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்ததாக ரவி தெரிவித்தார். 


இதனையடுத்து சந்தேகத்துக்குரிய மரணமாக வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வந்தனர். மேலும் குழந்தையின் மரணத்தைக் காரணமாக வைத்து தன் கணவனை மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பவும், சொத்துகளை விற்றுவிட்டு காதலனுடன் தப்பிச் செல்லவும் நாகலட்சுமி திட்டமிட்டுள்ளார்.


 






இந்நிலையில் குழந்தையின் உடற்கூராய்வு முடிவுகளைத் தொடர்ந்து இந்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. இந்நிலையில், கொலையாளி ரவி, அதற்கு உடந்தையாக இருந்த தாய் ஆகியோர் மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.