மயிலாடுதுறை மாவட்டத்தில் 14 வயது பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிய சாம்சன் பிரபாகரன் ( வயது 54) என்பவர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்
மயிலாடுதுறையை அடுத்த சித்தர்காடு, துரைகண் நகர், பகுதியைச் சேர்ந்த பால்தேவதாஸ் என்பவரின் மகன் 54 வயதான சாம்சன் பிரபாகரன், இவர் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தான் பணிபுரிந்த பள்ளியில் பயிலும் 14 வயது மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இது குறித்து அச்சிறுமியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்-2012 (POCSO) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுகந்தி, வழக்கை விசாரணையை மேற்கொண்டார். விசாரணையில் உடற்கல்வி ஆசிரியர் சாம்சன் பிரபாகரன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது உறுதியாது அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.
குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
இந்நிலையில் போஸ்கோ வழக்கில் கைதான சாம்சன் பிரபாகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார். அதன் பேரில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் சாம்சன் பிரபாகரனை தடுப்புக் காவல் சட்டத்தின்படி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுகந்தி மற்றும் காவலர்கள் சாம்சன் பிரபாகரனை கடலூர் மத்திய சிறையில் கொண்டு சென்று அடைத்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், வெளியிட்ட அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டத்தில்"சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது." மேலும்,
- பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள்.
- பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள்.
- கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள்.
- மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் (Goondas Act) நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடப்பு ஆண்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தவர்கள்: 27 நபர்கள்.
- திருட்டு குற்றங்களில் ஈடுபட்டவர்கள்: 03 நபர்கள்.
- மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டவர்கள்: 13 நபர்கள்.
- போதைப்பொருள் கடத்தல்/விற்பனை தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்கள்: 01 நபர்.
- பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள்: 03 நபர்கள் என
மொத்தம், 47 நபர்கள் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டும் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 47 நபர்கள் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.