Crime: லைவ் நிகழ்ச்சியில்  தொகுப்பாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பிலிப்பைன்ஸ் நாட்டில் செயல்பட்டு வரும் கலம்பா கோல்டு எஃப்எம்மில் நிகழ்ச்சியில் பணியாற்றி வருபவர் ஜுவான் ஜுமலோன் (57). இவர் ஜானி வாக்கர் என்ற பெயரில் அறியப்படும் ஜுவான் ஜுமலோன், அவருடைய இல்லத்திலேயே வாணொலி நிலையம் அமைத்து செயல்படுத்தி வந்துள்ளார். ​​இவர் பிலிப்பைன்ஸின் தெற்கு தீவான் மின்டானாவோவில் உள்ள தனது வீட்டில் உள்ள ஸ்டுடியோவில் இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் புகுந்துள்ளார்.  அப்போது, ஜுவான் ஜுமலோன் லைவ் நிகழ்ச்சி ஒன்று நடத்திக் கொண்டிருந்தார். அங்கு ஏராளமான மக்களும் இருந்துள்ளனர். அப்போது, ஸ்டுடியோக்குள் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் தொகுப்பாளர் ஜுவான் ஜுமலோனை சுட்டு உள்ளார். ​​


துப்பாக்கி சத்தத்தை கேட்ட அங்கிருந்த மக்கள் அங்குமிங்கும் ஒடினர். பின்னர், நிகழ்ச்சி  மேடையில் தொகுப்பாளர் ஜுவான் ஜுமலோன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இது குறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜுவான் ஜுமலோனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து, ஜுவான் ஜுமலோனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்தனர். 


இதுகுறித்து போலீசார் கூறுகையில், "தொகுப்பாளர் ஜுவான் ஜுமலோனை தலையில் இரண்டு முறை துப்பாக்கியால் மர்ம நபர் சுட்டுள்ளார். சுட்டபின் ஸ்டுடியோவில் இருந்து வெளியேறும் முன் ஜுவான் ஜுமலோனின் தங்க செயினை பறித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலை காரணம் என்னவென்றும் விசாரித்து வருகிறோம். ஜுவான் ஜுமலோன் உயிரிழந்ததற்கு முன், அவருக்கு எந்த ஒரு மிரட்டலும் வரவில்லை” என்றனர். 






இந்த தாக்குதலுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினான்ட் மார்கஸ் ஜூனியர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டடரில் பதிவிட்டிருப்பதாவது, "பத்திரிகையாளர் கொலை வெட்கக்கேடானது. குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள்  ஜனநாயகத்தில் அனுமதிக்கப்படாது. மேலும் பத்திரிகை சுதந்திரத்தை அச்சுறுத்துபவர்கள் அவர்களின்  முழு விளைவுகளையும் சந்திக்க நேரிடும்" என்று குறிப்பிட்டிருந்தார். அதிபர் மார்கஸ் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பதவியேற்றத்தில் இருந்து கொலை செய்யப்பட்ட நான்காவது பத்திரிகையாளராக ஜுவான் ஜுமலோன் உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


Crime: கர்நாடக பெண் அரசு அதிகாரியை கொலை செய்தது ஏன்? - குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்!