தொழில் நகரமாக விளங்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல ரவுடிகள் அட்டகாசம் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதிகளில் நாளுக்கு நாள் ரவுடிகளின் அட்டகாசம் பெருகி வருகிறது. கடந்த சில மாதங்களாக ரவுடிகள் மாதம்தோறும் தங்களுக்கு இவ்வளவு கட்டிக்கொடுக்க வேண்டும் என தங்கள் ஆதரவாளர்கள் மூலம் மிரட்டி பல தொழில் நிறுவனங்களை வேலை செய்ய விடாமல் தடுத்து வருவதாகவும் புகார்கள் எழுந்தன.

 

இந்நிலையில் சென்னை புறநகர் மாவட்டங்களாக உள்ளாகும் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ரவுடிகளை ஒதுக்குவதற்கு சிறப்பு தனிப்படைகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் சுங்குவார்சத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் ரவுடி மற்றும் கட்டபஞ்சாயத்து வேலையில் ஈடுபடும் படப்பை குணா என்பவரை கைது செய்வதற்கு காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். படப்பை குணாவின் ஆதரவாளர்களை ஒடுக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.

 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த படப்பை குணா திடீரென தலைமறைவானார். அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் தோல்வியில் முடிந்துள்ளது. இதனை அடுத்து அவருடைய ஆதரவாளர்களை கைது செய்யும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர். படப்பை குணாவிற்கு வலது கரமாக செயல்பட்டு வந்த போந்தூர் சிவா என்பவரை  காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதே வழக்கில் போந்தூர் சேட்டு என்பவரையும் தற்போது தேடி வருகின்றனர்.
  

 

வாகனங்கள் பறிமுதல்

 

குணாவிற்கு ஆதரவாளர்கள் மற்றும் படப்பை குணாவிற்கு  சொந்தமான ஸ்கிராப் ஆகியவற்றை ஏற்றிச்செல்லும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஜேசிபி ,லாரி உள்ளிட்ட 16 வாகனங்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது

 

படப்பை குணாவின் ஆதரவாளராக கருதப்படும் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் தென்னரசு கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் விஜயகாந்த் என்பவரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அரசு ஊழியரை தகாத வார்த்தையில் பேசியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

 

மேலும் படப்பை குணாவின் மனைவி எல்லம்மாளின் அண்ணன் திருநாவுக்கரசையும்  இதே வழக்கில் கைது செய்துள்ளனர் . இதனையடுத்து சம்பந்தப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  வழக்கை விசாரித்த நீதிபதி இருவருக்கும் நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவராக பதவி வகித்து வரும் தென்னரசு, போந்தூர் சிவா என்பவருக்கு மிகவும் நெருக்கமானவர் . போந்தூர் சிவா  படப்பை குமாருக்கு வலது கரமாக செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.