ஊட்டியில் காதலனுடன் சேர்ந்து மது அருந்திய கல்லூரி மாணவி உயிரிழந்ததற்கு, போதை காளான் காரணமா என காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
ஊட்டியில் கல்லூரி மாணவி மரணம்:
ஊட்டியில் தனியார் கல்லூரியில் பயின்று வந்த மாணவி, தனது காதலனுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது போதை காளானையும் உட்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் போதை தலைக்கேற, இருவரும் சுருண்டு விழுந்துள்ளனர். காலையில் காதலன் எழுந்த பார்க்கையில், உடனிருந்த இளம்பெண் உயிரற்று கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த இளைஞனை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி பருவ காதல்:
நீலகிரி மாவட்டம் ஊட்டி பாம்பே கேசில் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 20). அவரது பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், ஆகாஷ் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தன்னுடன் 10ம் வகுப்பில் பயின்ற, ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்த ரிதி ஏஞ்சல் (19) என்பவருடன்,ஆகாஷிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பள்ளி பருவம் முடிந்த நிலையில் ஆகாஷ் நீலகிரியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியிலும், ரிதி ஏஞ்சல் கோவையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியிலும் சேர்ந்தனர். இருப்பினும் இருவரும் அவ்வப்போது சந்திப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
காலனாய் வந்த காளான்:
இந்தநிலையில், கல்லூரி விடுமுறையான கடந்த சனிக்கிழமை ஆகாஷ் வகுத்துகொடுத்த திட்டப்படி, ரிதி ஏஞ்சல் கோவையில் இருந்து ஊட்டி வந்துள்ளார். அங்கிருந்து ரிதியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்ட ஆகாஷ், மதுக்கடையில் மது வாங்கிக்கொண்டு தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து வீட்டுக்கு வரவழைத்துள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் மது அருந்தியதோடு, இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள பைன் பாரஸ்ட் பகுதிக்கு சென்று மேஜிக் காளான் எனப்படும் போதை காளான் பறித்து வந்து மதுவுடன் சேர்த்து உண்டதாக கூறப்படுகிறது. இதனால் போதை உச்சம்தொட்டு, இருவரும் நிலைகுலைந்து மயங்கி விழுந்து விடியும் வரை தூங்கியுள்ளனர்.
மாணவி உயிரிழப்பு:
காலையில் தூக்கம் கலைந்து எழுந்த ஆகாஷ், நீண்ட நேரமாகியும் படுக்கையை விட்டு எழாத ரிதியை எழுப்ப முயன்றுள்ளார். அவரது முயற்சிகள் எதுவும் பலிக்காத நிலையில். 108 ஆம்புலன்சுக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த மருத்துவ பணியாளர், இளம் பெண்ணின் உடலை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரிதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து பின்னர் கொலை குற்றம் ஆகாத மரணம் ஏற்படுத்துதல் பிரிவில் வழக்கு பதிவு செய்து ஆகாஷை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.