புதுச்சேரியில் பயங்கரம்: செல்போனுக்கு வந்த ஒரு குறுஞ்செய்தி... ஒரே நாளில் 10 பேரிடம் ரூ.3 லட்சம் சுருட்டல்...!
புதுச்சேரியில் போலி 'ஏ.பி.கே' (APK) செயலி மற்றும் ஆன்லைன் லிங்க் மூலமாக ஒரே நாளில் அடுத்தடுத்து 10 பேரிடம் சுமார் ரூ.2 லட்சத்து 96 ஆயிரம் சுருட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் சமீபகாலமாக ஆன்லைன் மற்றும் பகுதிநேர வேலைவாய்ப்பு, செயலிகளை பதிவிறக்கம் செய்யக் கோருதல் போன்ற பல்வேறு நூதன வழிகளில் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது போலி 'ஏ.பி.கே' (APK) ஃபைல் மூலமாக புதுச்சேரியைச் சேர்ந்த 10 பேரிடம் சுமார் 2 லட்சத்து 96 ஆயிரத்து 813 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஏ.பி.கே (APK) செயலி மூலம் விழுந்த முதல் விக்கெட்!
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் மொபைல் போனுக்கு அண்மையில் குறுஞ்செய்தி (SMS) ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், தான் ஒரு பிரபல தனியார் கார் வாடகைக்கு விடும் (Rental Car) நிறுவனத்தின் பிரதிநிதி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
மேலும், தங்களது நிறுவனத்தின் பிரத்யேக செயலியை இன்ஸ்டால் செய்தால் பல்வேறு சலுகைகள் மற்றும் வருமானம் கிடைக்கும் என ஆசைவார்த்தைகளைக் கூறியுள்ளார். அதனை நம்பிய காலாப்பட்டு நபர், அந்த மர்ம நபர் அனுப்பிய லிங்க் மூலமாக ஒரு குறிப்பிட்ட ஏ.பி.கே (APK) ஃபைலை தனது மொபைலில் பதிவிறக்கம் செய்து நிறுவியுள்ளார்.
அடுத்தடுத்து 10 பேர் சிக்கினர்
இதேபோல் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் லிங்க்குகள் மூலமாக அடுத்தடுத்து 9 பேர் தங்களது பணத்தை பறிகொடுத்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
- காந்திநகரை சேர்ந்த நபர் - ரூ.48,000
- கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த நபர் - ரூ.39,000
- கோவிந்த சாலையை சேர்ந்த பெண் - ரூ.39,000
- மிஷன் வீதியை சேர்ந்த பெண் - ரூ.39,000
- காலாப்பட்டை சேர்ந்த மற்றொரு நபர் - ரூ.35,000
- கோரிமேட்டை சேர்ந்த நபர் - ரூ.27,000
- கோரிமேட்டை சேர்ந்த மற்றொருவர் - ரூ.25,000
- ஒதியன்சாலையை சேர்ந்த நபர் - ரூ.6,828
- பங்கூரை சேர்ந்த நபர் - ரூ.1,394
புதுச்சேரியில் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 10 பேர் தங்களது வங்கி கணக்குகளில் இருந்து ரூ.2 லட்சத்து 96 ஆயிரத்து 813-ஐ இழந்துள்ளனர்.
எப்படி நடந்தது திருட்டு?
அந்த போலியான செயலியில் தனது வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ரகசிய எண்களை அவர் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து, மொபைலுக்கு வந்த ஓ.டி.பி (OTP) எண்ணையும் மர்ம நபரிடம் பகிர்ந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 59,081 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அதிர்ச்சியடைந்த அவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்தார்.
சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை
ஒரே நேரத்தில் இத்தனைப் பேர் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தது தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸாருக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்தன. பாதிக்கப்பட்டவர்களின் புகார்களைப் பெற்றுக்கொண்ட போலீஸார், மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மோசடிப் பேர்வழிகள் பயன்படுத்திய வங்கி கணக்குகள், மொபைல் எண்கள் மற்றும் அவர்கள் அனுப்பிய ஏ.பி.கே லிங்க்குகளின் ஐபி முகவரி (IP Address) ஆகியவற்றை வைத்து சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சைபர் கிரைம் போலீஸாரின் அவசர எச்சரிக்கை:
அன்னிய நபர்களிடம் இருந்து வாட்ஸ்அப் அல்லது எஸ்.எம்.எஸ் மூலமாக வரும் எந்தவொரு 'APK' ஃபைல்களையும் மொபைலில் இன்ஸ்டால் செய்யக் கூடாது. கூகுள் பிளே ஸ்டோர் தவிர்த்து பிற வழிகளில் செயலிகளை பதிவிறக்குவது ஆபத்தானது. மேலும், எந்தவொரு சூழ்நிலையிலும் வங்கி கணக்கு விவரங்களையோ, ஓ.டி.பி (OTP) எண்களையோ யாருக்கும் பகிர வேண்டாம் எனப் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆன்லைன் மோசடிக்கு உள்ளானால் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை அழைக்கவும்.
ட்ரெண்டிங் செய்திகள்






















