புதுச்சேரி: புதுச்சேரியில் பகுதி நேர வேலை என சமூக வலைதளத்தில் வரும் விளம்பரத்தை நம்பி 300க்கும் மேற்பட்டோர் ரூ.20 கோடியை சைபர் கும்பலிடம் இழந்துள்ளதாக சைபர்கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

பகுதிநேர வேலை என கூறி மோசடி

புதுச்சேரியில் பகுதி நேர வேலை என சமூக வலைதளத்தில் வரும் விளம்பரத்தை நம்பி 300க்கும் மேற்பட்டோர் ரூ.20 கோடியை சைபர் கும்பலிடம் இழந்துள்ளதாக சைபர்கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது: சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, வாட்ஸ் ஆப், பேஸ்புக் மற்றும் டெலிகிராம் மூலம் அடையாளம் தெரியாத எண்களில் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, சீனா, கம்போடியா, நைஜீரியா போன்ற நாடுகளில் இருந்து பிரபல எம்.என்.சி., நிறுவனங்களின் பெயர்களில் வீட்டில் இருந்து பகுதிநேர வேலை செய்து சம்பாதிக்கலாம் என, குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்.

Continues below advertisement

ஸ்டார் ரேட்டிங்

பின், அவர்களுடைய வீடியோக்களுக்கு லைக் கொடுப்பது, மதிப்புரை செய்வது, ஆன்லைனில் பகிர்வது போன்றவற்றை செய்ய வைத்து ஒரு நாளைக்கு 500 முதல் 1000 ரூபாய் வரை வருமானத்தை வங்கி கணக்கில் அனுப்புகின்றனர். ஒரு கட்டத்தில் சைபர் குற்றவாளிகள் நீங்கள் அதிக ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளதால் முதலீடு செய்ய வேண்டும். இல்லை எனில் வேலையை தொடர முடியாது என, மிரட்டுகின்றனர். பின், போலியான வலைத்தளங்களை உருவாக்கி அதில் கணக்கு துவங்க வைத்து, பணத்தை முதலீடு செய்ய வைக்கின்றனர்.

300க்கும் மேற்பட்டோர் 20 கோடி ரூபாய்க்கு மேல் இழந்துள்ளனர்

அவர்களும் முன்பு லாபம் கிடைத்ததால், அதிக அளவில் பணத்தை முதலீடு செய்கின்றனர். பின், அவர்கள் கணக்கில் பெரும் தொகை லாபம் கிடைத்தவுடன், அதனை வெளியே எடுக்க முயற்சிக்கும் போது, கணக்கை முடக்கி, வரி செலுத்த வேண்டும் என கூறுகின்றனர். அவர்கள் கேட்கும் தொகையை கட்டிய பிறகும் லாப பணத்தை தராமல், மோசடி கும்பல் தொடர்பை துண்டித்து விடுகின்றனர்.

இதுபோன்று, 300க்கும் மேற்பட்டோர் 20 கோடி ரூபாய்க்கு மேல் இழந்துள்ளதாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் புகார்கள் வந்துள்ளது. எனவே, பொதுமக்கள் சமூக வலைத்தளம் மற்றும் ஆன்லைன் மூலம் வரும் பகுதி நேர வேலை வாய்ப்பு, வீட்டில் இருந்தே வேலை செய்து சம்பாதிக்கலாம் என்று வரும் போலியான விளம்பரத்தை நம்பி ஏமாற வேண்டாம். மேலும், சைபர் குற்றங்கள் தொடர்பாக புகார் மற்றும் சந்தேகங்களுக்கு 1930 மற்றும் 0413-2276144, 9489205246 மற்றும் cybercell-police@py.gov.in தொடர்பு கொள்ளலாம்.

போலீசாரின் எச்சரிக்கை மற்றும் அறிவுரை 

புதுச்சேரி இணைய வழி போலீசார், “இணையத்தில் ஏதேனும் பொருளை வாங்கும் முன்பும் அதன் உண்மைத்தன்மையை நன்கு ஆராய்ந்து, விற்பவரின் முழுமையான விபரங்களையும் சரிபார்த்து பார்த்த பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சமூக ஊடகங்களில் தோன்றும் கவர்ச்சியான விளம்பரங்களை உடனடியாக நம்பி பணம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

மோசடிக்கு ஆளானவர்கள் உடனடியாக புகார் அளித்தால், குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணி எளிதாகும் என்பதால், எந்த குற்றச்சம்பவத்தையும் மறைக்காமல் உடனடியாக தகவல் தருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  

எங்கே, எப்படி புகார் அளிப்பது?

இணைய குற்றச்செயல்களுக்கு உள்ளானால் அல்லது சந்தேகத்துக்கிடமான எந்த தகவலையாவது காணும்போது, பொதுமக்கள் பின்வரும் வழிகளைப் பயன்படுத்தி புகார் அளிக்கலாம்:  

  • தேசிய அளவிலான இலவச உதவி எண்: 1930
  • புதுச்சேரி சைபர் செல் எண்கள்: 0413-2276144 / 9489205246
  •  மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in
  • இணைய தளம்: www.cybercrime.gov.in 

விழிப்புணர்வே பாதுகாப்பு

ஆன்லைன் உலகில் அதிகரித்து வரும் போலி விளம்பரங்கள் மற்றும் மோசடிகளைத் தடுக்க காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், பொதுமக்கள் தங்களுக்குள் விழிப்புணர்வை வளர்த்துக்கொள்வது தான் மிகச் சிறந்த பாதுகாப்பு. குறிப்பாக பண்டிகை நாட்களில் வரும் சலுகை விளம்பரங்களைப் பார்த்து உடனடியாக நம்பாமல் சற்று ஆராய்ச்சி செய்தால், பெரும் இழப்புகளை தவிர்க்கலாம்.