Cyber Crime Yukthi 2.0: பெருகி வரும் சைபர் குற்றங்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட ஹேக்கத்தான் போட்டி கவனத்தை ஈர்த்துள்ளது.
சைபர் குற்றங்கள்:
பெருகி வரும் சைபர் குற்றங்கள் மட்டுமல்லாது தற்போது மரபுவழி குற்றங்களில் கூட இணைய வெளியைப் பயன்படுத்தி எதிரிகள் தங்கள் அடையாளங்களை மறைத்து, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தல் என்று, அனைத்து வகையான குற்றங்களிலும் இணைய பயன்பாடு பெருமளவு உள்ளது.வழக்குகளை விசாரிப்பதிலும், குற்றங்களை கண்டறிவதிலும் ஏற்படும் தடைகளை களைவதற்கும், டார்க் வெப் வழி நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்கும் சைபர் துறை வல்லுநர்களின் உதவி இன்றியமையாததாக உள்ளது.
புலன் விசாரணையிலுள்ள வழக்குகள் தொடர்பாக சைபர் துறை வல்லுநர்களின் உதவியை பெறும் வகையில், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையானது Selfmade Ninja Academy மற்றும் சவீதா பொறியியல் கல்லூரி உடன் இணைந்து 80 வகையான கடினமான சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய அளவிலான யுக்தி 2.0 என்ற சைபர் ஹேக்கத்தான் போட்டியை அறிவித்தது.
ஹேக்கத்தான் போட்டி:
இந்த ஹேக்கத்தானில் இந்தியா முழுவதிலிருந்து 2400 பேர் பதிவு செய்து, டிசம்பர் 13 மற்றும் 14ம் தேதிகளில் நடைபெற்ற முதல்நிலை போட்டிகளில் பங்கேற்றனர். அவர்களுள் முதல் 50 அணிகளைச் சார்ந்த 178 சைபர் வல்லுநர்கள் டிசம்பர் 19 மற்றும் 20ம் தேதிகளில் சவீதா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இறுதி போட்டியில் கலந்து கொண்டனர். தற்காலத்தில் நிகழும் சைபர் குற்றங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட 35 சிக்கல்களில் அதிகமானவற்றிற்கு தீர்வு கண்ட, 3 அணியினருக்கு முறையே ரூ75,000, ரூ50,000 மற்றும் ரூ25,000 ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.யுக்தி 2.0 ஹேக்கத்தானில் அடையப்பெற்றுள்ள முடிவுகள் தமிழ்நாடு காவல்துறையில் உள்ள சிக்கலான வழக்குகளை தீர்ப்பதற்கு உதவியாக திகழும் என சிபிசிஐடி காவல்துறை பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்
தமிழ்நாட்டில் ஆன்லைன் பண மோசடிகள், ஃபிஷிங், KYC மோசடிகள், வீடியோ மிரட்டல், சமூக வலைதள துஷ்பிரயோகம், சட்டவிரோத கொரியர் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற வடிவங்களில், சைபர் குற்றங்களால் பொதுமக்கள் பெரும் நிதி இழப்புகளைச் சந்திக்கின்றனர். டிஜிட்டல் நிதி மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 2025-ல் மட்டும் சைபர் குற்றங்களால் மக்கள் ரூ.1010 கோடி இழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு, 1930 என்ற உதவி எண் மற்றும் cybercrime.gov.in இணையதளம் வாயிலாக புகார்களைப் பெற்று, குற்றவாளிகளைக் கைது செய்வதோடு, சைபைர் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த ஹேக்கத்தான் போட்டியை நடத்தியுள்ளது.