ஒரு மாத பெண் குழந்தையை விற்பனை செய்த விவகாரத்தில் , மூன்று பேர் கைது.

Continues below advertisement

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த ஜி.சி.எஸ். கண்டிகை அருந்ததி காலனியைச் சேர்ந்தவர் மாயா ( வயது 30 ) திருநங்கை. மாயாவின் சித்தப்பா நகுலய்யா ( வயது 49 ) அவரது மகன் புவனேஷ் ( வயது 20 ) மற்றும் திருவள்ளூரை சேர்ந்த கவுஸ் பாஷா ( வயது 29 ) ஆகியோர் பிறந்து ஒரு மாதமான பெண் குழந்தையை 3.10 லட்சம் ரூபாய் கொடுத்து மாயாவுக்கு வாங்கி கொடுத்துள்ளனர்.

சமீபத்தில் குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்படவே திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மாயா சேர்த்துள்ளார். மருத்துவமனையில் மாயா அளித்த தகவலில் சந்தேகம் ஏற்படவே மருத்துவமனை நிர்வாகம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தது.

Continues below advertisement

விசாரணை நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரி மலர்விழி , ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் குழந்தை ஆந்திர மாநில வெங்கட் ராமய்யா ஷோபா தம்பதியுடையது என தெரிய வந்தது.

இவர்களுக்கு , இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். நான்காவதாக பிறந்த பெண் குழந்தையை மாயாவிற்கு விற்றது தெரிய வந்தது. இது தொடர்பாக நகுலய்யா, கவுஸ்பாஷா, புவனேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மாயாவை தேடி வருகின்றனர்.

" டிரேடிங் விளம்பரம் " ஆசை வார்த்தி காட்டி 1.43 கோடி ரூபாய் மோசடி

சென்னை பெருங்குடியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 36). இவர் கடந்த மார்ச் மாதம் சமூக வலை தளத்தில் வந்த டிரேடிங் விளம்பரத்தை பார்த்து அதில் கொடுக்கப்பட்டிருந்த வாட்ஸாப் குழுவில் இணைந்துள்ளார்.

அவற்றில் முதலீடு செய்யும் பணத்திற்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என அடிக்கடி வந்த விளம்பரங்கள் மற்றும் குழுவில் இருந்தவர்களின் வார்த்தைகளை நம்பி பல்வேறு தவணையாக 1.43 கோடி ரூபாய் செலுத்தி உள்ளார்.

துவக்கத்தில் சிறிது லாபம் கிடைத்துள்ளது. அதன்பின் அவரால் முதலீடு செய்த தொகையை எடுக்க முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

போலீசாரின் விசாரணையில் சூர்யா ஏற்றுமதி இறக்குமதி நிறுவன உரிமையாளரான நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சூர்யா ஸ்ரீனிவாஸ் ( வயது 50 ) என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவரது கூட்டாளியான ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள கோடக் மகேந்திர தனியார் வங்கி கிளையின் முன்னாள் மேலாளரான மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த சேஷாத்ரி எத்தி ராஜ் ( வயது 43 )  என்பவர் மோசடிக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இருவரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.