வியாழன் அதிகாலை அன்று டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த ஒரு சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், பதினைந்து பயணிகள் காயமடைந்தனர். பினோலா கிராமத்திற்கு அருகே அதிகாலை ஐந்தரை மணியளவில் முப்பது பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து பின்னால் இருந்து டிரக் மீது மோதியதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது என பிடிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான பேருந்து ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே பேருந்து ஓட்டுநர் பிரவீன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
லோட் லாரியின் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதன் காரணமாகவே பஸ் வண்டியின் மீது மோதியதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் தலைமையிலான போலீஸ் குழு, பிலாஸ்பூர் காவல் நிலையத்தின் எஸ்.எச்.ஓ மற்றும் தீயணைப்பு படை குழுவினர் ஆகியோர் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டனர். இரு வாகனங்களுக்கு இடையே சிக்கிய பஸ் டிரைவரை இந்தக் குழுவினர் வெளியே எடுத்தனர்.
டிரக் ஓட்டுநருக்கு எதிராக பிலாஸ்பூர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 279 அடிப்படையில் வாகனம் ஓட்டுதல், 304A அலட்சியத்தால் மரணம் ஆகிய சட்டப்பிரிவின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று எஸ் ஹெச் ஓ நமக்குத் தகவல் பகிர்ந்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடிக்க தற்போது முயற்சிகள் நடந்து வருகின்றன.
முன்னதாக இதே போன்ற வேறு ஒரு நெடுஞ்சாலை விபத்தில் பரோடா பெண்கள் க்ரிக்கெட் அணி நூலிழையில் உயிர்தப்பியது குறிப்பிடத்தகது.விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டி20 போட்டிக்குப் பிறகு வீராங்கனைகளை ஏற்றிக்கொண்டு பேருந்து விமான நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாடி செட்லபாலம் தேசிய நெடுஞ்சாலையில், அவர்களுக்கு முன்னால் சென்ற லாரி மீது பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது.
குழு மேலாளருடன் சேர்த்து குறைந்தது ஐந்து வீராங்கனைகள் காயங்களுக்குள்ளானதாக அறிக்கைகள் மேலும் தெரிவித்தன. சம்பவம் குறித்து தகவல் அறிந்த காஞ்சரபாளையம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.