தூத்துக்குடி எட்டையபுரம் ரோடு ஆதிபராசக்தி நகர், மச்சாது நகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் ராஜூ. அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பவானி. இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர்.




இந்நிலையில் பிற்பகல் 2 மணிளவில் பவானி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து அவரை கழுத்தை நெறித்தும், கட்டையால் தாக்கியும் கொலை செய்துள்ளனர். பின்னர் அவர் காதில் அணிந்திருந்த கம்மல்களை திருடிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.  இதுகுறித்து தகவல் அறிந்து மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், ரூரல் டிஎஸ்பி (பொ) சம்பத், சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 




மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் நகை, பணம் இருக்கிறதா? என பார்த்துள்ளனர். இதன் மூலம் நகைக்காக இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொலையில் 3பேருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.




பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு சிலுக்கன்பட்டி செந்திலாம்பண்ணையை சேர்ந்த முத்துப்பாண்டி. இவர் தற்போது புதுக்கோட்டை அய்யனார் காலனியில் வசித்து வந்தார். இவர் மீது கஞ்சா விற்பனை செய்தது உள்பட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.  மாலையில் தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடை அருகே நின்று கொண்டு இருந்த போது, அங்கு மர்ம ஆசாமிகள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து உள்ளனர். அவர்கள் திடீரென மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சரமாரியாக முத்தப்பாண்டியை வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.




இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் பியா வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.




இது தொடர்பாக தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முத்துப்பாண்டி கஞ்சா விற்பனை செய்ததில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி, அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.