உண்டியல் பணத்துக்காக மூதாட்டியை கொலை செய்த கொடூரம்: திருவாடானை அருகே பரிதாபம்! ஒருவர் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு..!
திருவாடானை அருகே, பட்டபகலில் மூதாட்டியை கொலை செய்துவிட்டு உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள ஆயிரவேலி கிராமத்தில் பூங்கோதை (65) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், பூங்கோதை தன் 2-வது மகன் ஈஸ்வரனுடன் வசித்து வந்தார். ஈஸ்வரன் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் ஈஸ்வரன் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் அவரது தாயார் பூங்கோதை ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரன் உடனடியாக திருவாடானை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து தடயவியல் நிபுணர்களை கொண்டு வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் பூங்கோதை வீட்டின் பூஜை அறையில் உள்ள ஈஸ்வரன் ஆட்டோ வாங்கும் போது வாங்கிய கடனுக்கான தொகையை ஒரு உண்டியலில் சிறுக சிறுக சேர்த்து வந்தார். அந்த உண்டியல் உடைந்த நிலையில் அதில் இருந்த 10,000 ரூபாய் திருடுபோய் இருந்துள்ளது.
இந்நிலையில் மர்மநபர்கள் திட்டமிட்டு பூங்கோதை வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து அவரை இரும்பு கம்பியால் தாக்கி கொன்றுவிட்டு உண்டியலில் இருந்த பணத்தை திருடிவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. ஆனால் பூங்கோதை அணிந்திருந்த கம்மல், வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் இருந்த இடத்திலேயே இருந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலிலேயே மர்மநபர்கள் வீடு புகுந்து கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையினரிடம் கேட்டபோது,திருவாடானை அருகே ஆயிரவேலி கிராமத்தில் தனியாக இருந்த மூதாட்டியை மண்டையில் தாக்கி படுகொலை செய்துள்ளனா்.இது குறித்து போலீஸாா் சடலத்தை கைப்பற்றி விசாரித்ததில் இந்த கொலையில் தொடர்புடைய இரண்டு நபர்களில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும்,மற்றொருவரை தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவித்தனா்.