நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே வீரவநல்லூர் கிராமம். இக்கிராமத்தில் உள்ள உப்பாத்து காலனியில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. குறிப்பாக பிரதான சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் ஊருக்கு அருகே தனியாக இருப்பதால் இக்கடையில் இரவு காவலாளியாக ஆண்ட பெருமாள் என்பவர் வேலை செய்து வருகிறார். பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 28 ஆம் தேதி இரவு மதுபானங்கள் லோடு இறங்கியுள்ளது. அதன்பின் வழக்கம்போல் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். மேலும் இரவு காவலாளியான ஆண்ட பெருமாளும் திடீரென உடல் நலக்குறைபாடு ஏற்பட்ட நிலையில் வீட்டிற்கு சென்றுள்ளார்.  




இதை கண்காணித்து நோட்டமிட்ட மர்ம கும்பல் மதுபான கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின் கடையில் இருந்த மதுபாட்டில்களையும் திருடிச்சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கடையின் விற்பனையாளர் கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  பின்னர்  இதுகுறித்து வீரவநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். தகவலறிந்த வீரவநல்லூர் போலீசார் மதுபான கடைக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது கடையில் இருந்த மதுபான பாட்டில்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. மேலும், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கடையில் இருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள சுமா‌ர் 40 பெட்டி மதுபானங்கள் திருடு போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல  டாஸ்மாக் கடையில் உள்ள CCTV கேமராவில் பதிவாகும் Hard Disk ஐயும் திருடர்கள் திருடி சென்றுள்ளனர். முன்னதாக கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அவர்களின் உதவியுடனுடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கடையை நோட்டமிட்டு திட்டமிட்டு மதுபான பாட்டில்களை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர