நெல்லை மாவட்டம் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு. ( வயது 32 ). இவரது தாய் தந்தை உயிரிழந்த நிலையில் மரியபுஷ்பவம் என்ற தனது பாட்டியுடன் அன்புவும் அவரது சகோதரியும் வசித்து வருகின்றனர். அதோடு அன்பு கிடைத்த வேலையை பார்ப்பதோடு சரிவர வேலைக்கு செல்லாமலும் இருந்து வந்துள்ளார், மேலும் மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சூழலில் விவசாய வேலைகளை முடித்துவிட்டு இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு அயர்ந்து கலையரங்கத்திலேயே உறங்கி உள்ளார்.  தொடர்ந்து அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் இரத்த வெள்ளத்தில் அன்பு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சிவந்திபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 


இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அன்பு கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்ப முயற்சித்தபோது ஊர் பொதுமக்கள் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். இது போன்ற தொடர் சம்பவங்கள் இனிமேல் நடைபெற கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அன்புவின் உடலை  போலீசாரால் மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


முதல் கட்ட விசாரணையில் 15 வயது சிறுவன் தனது தந்தையான வேல் என்பவரின் கண்காணிப்போடு கொலை சம்பவத்தை செய்ததாக தெரியவந்துள்ளது. அப்பகுதியில் உள்ள காவல்துறையின் சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும் அதனடிப்படையில் காவல்துறை விரிவான விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கொலை சம்பவத்தை மேற்கொண்ட மகனும், தந்தையும் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக அச்சிறுவனுக்கும் கொலை செய்யப்பட்ட அன்புவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் நொச்சிக்குளம் கிராமத்தில் கஞ்சா பழக்கம் அதிக அளவில் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளதுடன் கொலை சம்பவத்தை செய்த சிறுவனும் கஞ்சா போதையில் இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் உறுதியான நடவடிக்கை எடுக்காதது இந்த கொலைக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் நொச்சிக்குளம் கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். குறிப்பாக கொலை செய்யப்பட்ட அன்புவின் சகோதரிக்கு வருகின்ற வெள்ளிக்கிழமை திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைபெற உள்ள நிலையில் இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாய், தந்தையையும் இழந்து சகோதரன் மட்டும் இருந்த நிலையில் அவனும் தற்போது இழந்துவிட்ட நிலையில் இளம் பெண் நிற்கதியாகி உள்ள நிகழ்வு கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.