சென்னை அருகே மாங்காடு அடுத்த மதனந்தபுரம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களது இளைய மகள் பானுமதி (25), இளங்கலை படிப்பை முடித்துள்ள நிலையில் முதுகலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
மேலும் இவர் மாநில மற்றும் தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளார். இந்நிலையில், நேற்று மாலை வீட்டிற்கு வந்த பானுமதி அறையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பானுமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பானுமதி உடலை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரித்தனர்.
இதில் உரிய வேலை கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், ராஜஸ்தானில், நடந்த கபடி போட்டி முடித்து விட்டு நேற்று காலை ராஜஸ்தானில் இருந்து வந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதப்போவதாக தனது அக்காவிடம் தெரிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக மாங்காடு போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் தொடர்பு கொண்டு கேட்டபோது, தேசிய அளவில் கபடி வீராங்கனையாக இருந்த வந்தாலும், உயிரிழந்த பெண் குடும்பம் வறுமையில் இருந்து வந்துள்ளது. முதல்முறை வேலைக்கு பதிவு செய்திருந்தும் வேலை கிடைக்காத காரணத்தினால் விரக்தியில் இருந்து வந்துள்ளார். இதுவரை நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் வேலையில்லாத விரக்தியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததுள்ளது , வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060).