நாசிக் அருகே காதலியைக் கொலை செய்து உடலை வனப்பகுதியில் வீசிய வழக்கில், ஒரு சிறிய சாவிக்கொத்தை வைத்து கொலையாளியை போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது சம்பவம் அரங்கேறியுள்ளது.

Continues below advertisement

நாசிக் மாவட்டம் வாடிவர்ஹே காவல் எல்லைக்குட்பட்ட சாருல் காட்டுப்பகுதியில், வெள்ளிக்கிழமை அன்று ஒரு இளம் பெண்ணின் உடல் ரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவரது கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. சம்பவ இடத்தில் நேரடி ஆதாரங்கள் ஏதும் இல்லாத நிலையில், சடலத்தின் அருகே கிடந்த ஒரு சாவி மற்றும் அதில் இருந்த "சமஸ்கிருதி" என்ற பெயர் கொண்ட சாவிக்கொத்து போலீசாருக்குப் பெரிய துப்பாக அமைந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு மாநிலம் முழுவதும் தேடியபோது, புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த சமஸ்கிருதி சதீஷ் காலே என்ற பெண் காணாமல் போனது தெரியவந்தது. அவரது தந்தையை வரவழைத்து உடல் அடையாளம் காணப்பட்டது. விசாரணையில், அகோலாவில் படித்து வந்த சமஸ்கிருதிக்கும், நாசிக்கில் படித்து வந்த அதர்வ தேஷ்முக் என்ற இளைஞருக்கும் காதல் இருந்தது உறுதியானது.

Continues below advertisement

கொலைக்கான காரணம் குறித்து அதர்வா அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமஸ்கிருதி வேறொரு இளைஞனுடன் பழகுவதைக் கண்டு ஆத்திரமடைந்த அதர்வா, அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். கல்லூரி விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அதர்வா, நடைப்பயணம் செல்வதாகக் கூறி சமஸ்கிருதியைத் தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். காரில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைக் குத்திக் கொலை செய்துள்ளார்.

கொலைக்குப் பிறகு சடலத்தை எங்கு அப்புறப்படுத்துவது என்று தெரியாமல், புல்தானாவிலிருந்து நாசிக் வரை காரிலேயே உடலைக் கொண்டு வந்து வனப்பகுதியில் வீசியுள்ளார். தலைமறைவாக இருந்த அதர்வ தேஷ்முக்கை, காவல் ஆய்வாளர் பகவான் மதுரே தலைமையிலான தனிப்படையினர் சின்னார் மற்றும் கோபர்கான் பகுதிகளில் தேடி, இறுதியாக நாசிக் நகரில் வைத்து அவனது கூட்டாளி ஒருவருடன் கைது செய்தனர். காதலால் விளைந்த இந்த விபரீதக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.