நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சின்ன அரியாகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்பாண்டியன். இவரது மகள் ஸ்வேதா 2019ல் 12ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார். இந்நிலையில் அவர் மருத்துவத்தில் சேர்வதற்காக நீட் தேர்வுக்கு தயாராகி உள்ளார். கடந்த ஆண்டு எழுதிய நீட் தேர்வில் அவர் தோல்வி அடைந்தார்.  இந்நிலையில் மீண்டும் இந்த வருடம் நீட் தேர்வில் அவர் பங்கேற்றார். இரண்டாவது முறையாக நீட் எழுதிய நிலையில் ஸ்வேதாவை நேற்று காலை முதல் வீட்டில் காணவில்லை எனக் கூறப்படுகிறது.


அருகே எங்காவது சென்றிருக்கலாம் என்று பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் ஸ்வேதாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இது குறித்து மாணவியின் தந்தை நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வு ரிசல்டுக்கு பயந்து ஸ்வேதா எங்காவது சென்றாரா? அல்லது வேறு எதும் பிரச்னை இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலரிடமும் விசாரணை தொடர்கிறது



இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் இந்தியா முழுவதும் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் சுமார் 1.10 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் நீட் தேர்வு காரணமாக உயிரிழப்புகள் தொடர்கின்றன. நீட் தேர்வுக்கு முதல்நாளே தனுஷ் என்ற மாணவர் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். அந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் 14ஆம் தேதி கனிமொழி என்ற மாணவியும், 1 5ஆம் தேதி சவுந்தர்யா என்ற மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். ஒரு மாணவி தற்கொலை முயற்சி மேற்கொண்டதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. நீட் தேர்வு தொடர்பாக அடுத்தடுத்து உயிரிழப்புகள் நடைபெறுவதைக் கருத்தில்கொண்டு, நீட் தேர்வெழுதிய அனைவருக்கும் கவுன்சிலிங் கொடுக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.